ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியம் ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பேட்டி


ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியம் ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பேட்டி
x
தினத்தந்தி 13 April 2018 9:00 PM GMT (Updated: 13 April 2018 8:33 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், ‘ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியமானது’ என்று கூறினார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், ‘ரன் கொடுக்காத வகையில் பந்து வீசுவது முக்கியமானது’ என்று கூறினார்.

ஐதராபாத் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியில் விருத்திமான் சஹா (22 ரன்), ஷிகர் தவான் (45 ரன்) வலுவான தொடக்கம் ஏற்படுத்தி தந்த போதிலும், மிடில் வரிசையில் வீரர்கள் சொதப்பினர். சுழற்பந்து வீச்சாளர் மயங் மார்கண்டே 4 விக்கெட்டுகளை சாய்த்து ஐதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பென் கட்டிங் வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் சிக்சர் உள்பட 10 ரன்கள் வந்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது ஸ்டான்லேக் பவுண்டரி அடித்து ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தார். கடைசி விக்கெட் ஜோடியான தீபக் ஹூடா 32 ரன்களுடனும், ஸ்டான்லேக் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ரஷித்கான் பேட்டி

4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான் நாட்டவர்) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் வீசிய 24 பந்துகளில் 18-ல் ரன்னே எடுக்கப்படவில்லை. 19 வயதான ரஷித்கான் நிருபர்களிடம் கூறுகையில், ‘மும்பை அணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயமாகும். பந்து வீச்சில் அபாரமான முயற்சி இது. உண்மையிலேயே எல்லா பவுலர்களும் நன்றாக பந்து வீசினர். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை ரன் கொடுக்காத பந்துகள் (டாட்பால்) மிகவும் முக்கியமானது. முடிந்த வரைக்கும் அதிகமான ‘டாட்பால்’ வீச வேண்டும் என்ற திட்டமிட்டு செயல்பட்டேன். களம் இறங்கி, விருப்பம் போல் உற்சாகமாக பந்து வீசுங்கள் என்பதே அணி நிர்வாகம் எனக்கு வழங்கிய அறிவுரை. எப்போதுமே பேட்ஸ்மேன்கள் எந்த பகுதியில் அடிப்பார்கள், அவர்களின் பலவீனம் என்ன? என்பதை கணித்து, அதற்கு ஏற்ப சரியான அளவில் பந்து வீச முயற்சிக்கிறேன். லெக்ஸ்பின், கூக்ளி வகை பந்துகள் வீசுவது மிகவும் பிடிக்கும். இரண்டு வகையிலும் பந்தை துல்லியமாக திரும்ப செய்வேன்.

இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்திருந்த நாங்கள், 107 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டோம். குறுகிய நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் விழுவது சகஜம் தான். ஆனாலும் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். இந்த ஆட்டநாயகன் விருதை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எனது நண்பரின் மகனுக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

Next Story