ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் அதிரடியில் பெங்களூரு வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் அதிரடியில் பெங்களூரு வெற்றி
x
தினத்தந்தி 13 April 2018 9:15 PM GMT (Updated: 13 April 2018 8:37 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் அதிரடியின் துணையுடன் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் அதிரடியின் துணையுடன் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

கெய்லுக்கு இடமில்லை

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லுக்கு இந்த முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திருமணம் முடித்த கையோடு ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் அணியில் இணைந்து விட்ட ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலிய நாட்டவர்) டேவிட் மில்லருக்கு பதிலாக இடம் பிடித்தார்.

பஞ்சாப் 155 ரன்

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 155 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 47 ரன்களும் ( 30 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் அஸ்வின் 33 ரன்களும், கருண் நாயர் 29 ரன்களும் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் (0), யுவராஜ்சிங் (4 ரன்) ஜொலிக்கவில்லை. பெங்களூரு தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், கிறிஸ்வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், கெஜ்ரோலியா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சில் தடுமாறினர். பிரன்டன் மெக்கல்லம் (0), கேப்டன் விராட் கோலி (21 ரன்), குயின்டான் டி காக் (45 ரன்), சர்ப்ராஸ் கான் (0) ஆகியோர் சுழல்வலையில் சிக்கினர்.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ், மன்தீப்சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். முஜீப் ரகுமான், மொகித் ஷர்மாவின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு டிவில்லியர்ஸ் நெருக்கடியை குறைத்தார். வெற்றியை நெருங்கிய சமயத்தில் டிவில்லியர்ஸ் 57 ரன்களில் (40 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து மன்தீப்சிங் (22 ரன்) ரன்-அவுட் ஆனார்.

பெங்களூரு வெற்றி

வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், இறுதிஓவரை வாஷிங்டன் சுந்தர் எதிர்கொண்டார். மொகித் ஷர்மா வீசிய இந்த ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாஷிங்டன் சுந்தர் அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தை மீண்டும் பவுண்டரிக்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்த பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

Next Story