ஐதராபாத் அணிக்கு 139 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்


ஐதராபாத் அணிக்கு 139 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
x
தினத்தந்தி 14 April 2018 5:30 PM GMT (Updated: 14 April 2018 5:30 PM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 139 ரன்களை இலக்காக வைத்தது. #IPL

கொல்கத்தா, 

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கனே வில்லியம்சன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். இதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2 வது ஓவரின் 4 வது பந்தில் உத்தப்பா வெறும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்ப பின்னா் நிதீஷ் ராணா கிறிஸ் லின்னுடன் கை கோர்த்தார்.

இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருக்க அணியின் ஸ்கோர் 55 ரன்களாக இருக்கும் போது நிதிஷ் ராணா 18 ரன்களில் ஸ்டான்லேக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய எந்த வீரர்களும் சொல்லி கொள்ளும் படியாக விளையாடததால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மந்த நிலையிலேயே ஏற்றம் கண்டது. அந்த அணியின் அதிகபட்சமாக கிறிஸ் லீன் (49 ரன்கள்) மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் (29 ரன்கள்) எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. ஐதராபாத் அணியில் சார்பாக வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஸ்டான்லேக் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் 139 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.

மேலும் ஆட்டத்தின் 7 வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story