பெங்களூருவிடம் தோல்வி: ‘30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கருத்து


பெங்களூருவிடம் தோல்வி: ‘30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கருத்து
x
தினத்தந்தி 14 April 2018 9:00 PM GMT (Updated: 14 April 2018 6:30 PM GMT)

8–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 8–வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 47 ரன்னும், கேப்டன் அஸ்வின் 33 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், கிறிஸ்வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், கெஜ்ரோலியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 3 பந்துகள் எஞ்சிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார். அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 57 ரன்னும், குயின்டான் டி காக் 45 ரன்னும், கேப்டன் விராட்கோலி 21 ரன்னும், மன்தீப்சிங் 22 ரன்னும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2–வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டு இருந்தது. தொடக்க லீக் ஆட்டத்தில் டெல்லியை சாய்த்து இருந்த பஞ்சாப் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கருத்து தெரிவிக்கையில், ‘தோல்வி கண்டாலும் எங்கள் அணி வீரர்கள் கடைசி வரை வெற்றிக்காக போராடிய விதம் பெருமை அளிக்கிறது. நாங்கள் 20 முதல் 30 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தாலும் போட்டிகளில் அதனை நம்பி இருக்கக்கூடாது. சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவது தான் முக்கியம். எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர்’ என்றார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘உள்ளூரில் நடைபெறும் முதல் ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். அதில் வெற்றி பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உமேஷ்யாதவ் அருமையாக பந்து வீசினார். அவர் ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானதாகும். எங்களது பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story