ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 3-வது தோல்வி கடைசி பந்தில் டெல்லியிடம் வீழ்ந்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 3-வது தோல்வி கடைசி பந்தில் டெல்லியிடம் வீழ்ந்தது
x
தினத்தந்தி 14 April 2018 9:15 PM GMT (Updated: 14 April 2018 6:38 PM GMT)

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் டெல்லியிடம் வீழ்ந்து தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்தது.

மும்பை, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் டெல்லியிடம் வீழ்ந்து தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்தது.

9-வது லீக் ஆட்டம்

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் நேற்று மாலை நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியில் பென் கட்டிங், பிரதீப் சங்வான் ஆகியோருக்கு பதிலாக அகிலா தனஞ்ஜெயா, ஹர்திக் பாண்ட்யாவும், டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ், காலின் முன்ரோவுக்கு பதிலாக ஜாசன் ராய், டேனியல் கிறிஸ்டியனும் சேர்க்கப்பட்டனர்.

அதிரடி தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ்சுடன் இணைந்து களம் இறங்கினார். இருவரும் அடித்து ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்கள் என விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) 84 ரன்கள் திரட்டிய மும்பை அணி 8.3 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது. அணியின் ஸ்கோர் 102 ரன்னாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அதிரடியாக ஆடிய இவின் லீவிஸ் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் திவேதியா பந்து வீச்சில் ஜாசன் ராயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சூர்யகுமார் அரைசதம்

அடுத்து களம் கண்ட இஷான் கிஷன் அதிரடியில் பட்டையை கிளப்பினார். 29 பந்துகளில் அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ் (53 ரன்கள், 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ராகுல் திவேதியா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 166 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் (44 ரன்கள், 23 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்) டேனியல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த பந்திலேயே பொல்லார்ட் (0) விக்கெட்டையும் டேனியல் கிறிஸ்டியன் காலி செய்தார்.

அடுத்து கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்னிலும், குணால் பாண்ட்யா 11 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அகிலா தனஞ்ஜெயா 4 ரன்னுடனும், மயங் மார்கண்டே 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் திவேதியா, டிரென்ட் பவுல்ட், டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

ஜாசன் ராய் அபாரம்

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் நிலைத்து நின்று அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முஸ்தாபிஜூர் ரகுமான் வீசினார். முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்த ஜாசன் ராய், அடுத்த 3 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்து வீசுகையில் மும்பை அணி பீல்டர்களை முன்னால் கொண்டு வந்தது. அதனை பயன்படுத்தி ஜாசன் ராய் தூக்கி அடித்து ஒரு ரன் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தார்.

மும்பை அணி 3-வது தோல்வி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜாசன் ராய் 91 ரன்னுடனும் (53 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன்), ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்னுடனும் (20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேப்டன் கம்பீர் 15 ரன்னிலும், ரிஷாப் பான்ட் 47 ரன்னிலும் (25 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்), மேக்ஸ்வெல் 13 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மும்பை அணி தரப்பில் குணால் பாண்ட்யா 2 விக்கெட்டும், முஸ்தாபிஜூர் ரகுமான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜாசன்ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

3-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். ஏற்கனவே சென்னை, ஐதராபாத் அணிகளிடம் இதேபோல் கடைசி ஓவரில் தோல்வி கண்டு இருந்தது. 3-வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

Next Story