ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூரு சஞ்சு சாம்சன் சிக்சர் மழை


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூரு சஞ்சு சாம்சன் சிக்சர் மழை
x
தினத்தந்தி 15 April 2018 8:45 PM GMT (Updated: 15 April 2018 7:20 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 10 சிக்சருடன் 92 ரன்கள் விளாசினார்.

பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் 10 சிக்சருடன் 92 ரன்கள் விளாசினார்.

பச்சை உடையில் பெங்களூரு

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் ஒரே மாற்றமாக சர்ப்ராஸ் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பவான் நெகி சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இயற்கை வளம் பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற உடைக்கு பதிலாக பச்சை நிற சீருடை அணிந்து களம் கண்டனர்.

சாம்சன் ரன்மழை

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள், பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அதிரடியில் பட்டையை கிளப்பினர். கேப்டன் ரஹானே 36 ரன்னிலும், டார்சி ஷார்ட் 11 ரன்னிலும் வெளியேறினர்.

2-வது விக்கெட்டுக்கு ஆட வந்த சஞ்சு சாம்சன், பெங்களூரு பந்து வீச்சை புரட்டியெடுத்தார். இதனால் ராஜஸ்தானின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் (27 ரன்), ஜோஸ் பட்லர் (23 ரன்), திரிபாதி (14 ரன், நாட்-அவுட்) ஆகியோரும் சாம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ராஜஸ்தானின் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் ராஜஸ்தான் வீரர்கள் 8 சிக்சர் உள்பட 75 ரன்கள் திரட்டி வியப்பூட்டினர். கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சஞ்சு சாம்சன் 92 ரன்களுடன் (45 பந்து, 2 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். முந்தைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கதாநாயகனாக ஜொலித்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 59 ரன்களை வாரி வழங்கினார்.

கோலி அரைசதம்

பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு 4-வது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பிரன்டன் மெக்கல்லம் 4 ரன்னில் நடையை கட்டினார். தொடர்ந்து குயின்டான் டி காக் (26 ரன்), கேப்டன் விராட் கோலி (57 ரன், 30 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் (20 ரன்) உள்ளிட்டோர் கணிசமான பங்களிப்போடு பெவிலியன் திரும்பினர்.

இறுதி கட்டத்தில் மன்தீப்சிங்கும், வாஷிங்டன் சுந்தரும் சிறிது நேரம் மிரட்டினர். குறிப்பாக சுந்தர் ஆடிய விதத்தை பார்த்த போது, பெங்களூரு அணிக்கு லேசாக வெற்றிவாய்ப்பு எட்டிப்பார்த்தது. 19-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரை (35 ரன், 19 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) பென் ஸ்டோக்ஸ் கிளன் போல்டு ஆக்கியதும், பெங்களூரு அணியின் நம்பிக்கை தகர்ந்தது.

பெங்களூரு தோல்வி

20 ஓவர்களில் பெங்களூரு அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. மன்தீப்சிங் 47 ரன்களுடன் (25 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். 3-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

இந்த சீசனில் டாஸில் தோற்று அதன் பிறகு அந்த போட்டியில் வெற்றி கண்ட முதல் கேப்டனாக ராஜஸ்தானின் ரஹானே திகழ்கிறார்.

Next Story