ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா?பெங்களூருவுடன் இன்று மோதல்


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா?பெங்களூருவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 16 April 2018 10:30 PM GMT (Updated: 16 April 2018 8:02 PM GMT)

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி (சென்னை, ஐதராபாத், டெல்லி அணிகளிடம்) அடுத்தடுத்து 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெற்று இருந்தாலும் அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்காததால் நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் இன்னும் நல்ல நிலைக்கு வராததும் அந்த அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாகும்.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு வெற்றியும் (பஞ்சாப் அணிக்கு எதிராக), 2 தோல்வியும் (கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. இதனால் அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக ஆடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் விராட்கோலி அரை சதம் அடித்தாலும், மற்ற அதிரடி ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் மும்பை அணி 13 முறையும், பெங்களூரு அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி கணக்கை தொடங்க மும்பை அணியும், 2-வது வெற்றியை பெற பெங்களூரு அணியும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Next Story