கொல்கத்தாவிடம் பணிந்தது டெல்லி: நெருக்கடியில் உற்சாகமாக பேட் செய்கிறேன் - நிதிஷ் ராணா


கொல்கத்தாவிடம் பணிந்தது டெல்லி: நெருக்கடியில் உற்சாகமாக பேட் செய்கிறேன் - நிதிஷ் ராணா
x
தினத்தந்தி 17 April 2018 10:30 PM GMT (Updated: 17 April 2018 7:31 PM GMT)

நெருக்கடியில் உற்சாகமாக பேட் செய்கிறேன் என நிதிஷ் ராணா கூறினார்.

கொல்கத்தா,

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா, நெருக்கடியில் உற்சாகமாக பேட் செய்து வருவதாக கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை பந்தாடியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிதிஷ் ராணா (59 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்செல் (41 ரன், 12 பந்து, 6 சிக்சர்) ஆகியோரின் அதிரடியின் உதவியுடன் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் ரிஷாப் பான்ட் (43 ரன்), மேக்ஸ்வெல் (47 ரன்) ஆகியோர் தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. கொல்கத்தா தரப்பில் சுனில் நரின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது பெற்ற கொல்கத்தா வீரர் 24 வயதான நிதிஷ் ராணா கூறுகையில், ‘நான் ஏற்கனவே சொன்னது போல் நெருக்கடிக்கு மத்தியில் தான் எனது சிறப்பான ஆட்டம் வெளிப்படுவதாக நம்புகிறேன். நெருக்கடியில் அனுபவித்து உற்சாகமாக பேட் செய்கிறேன். இந்த ஆட்டத்தில் கடைசி வரை பேட் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினேன். துரதிர்ஷ்டவசமாக சற்று முன்பாக (18.3 ஓவர்) அவுட் ஆகி விட்டேன்.

வெற்றியில் எனது பங்களிப்பே மிகப்பெரியது என்று நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். உதாரணமாக குல்தீப் யாதவ், முக்கியமான கட்டத்தில் ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார்’ என்றார்.

டெல்லி வீரர் மேக்ஸ்வெல் கூறும் போது, ‘எங்களது பந்து வீச்சு சீராக இல்லை. இந்த ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்தால் கொல்கத்தா அணி 18 ஓவர்களிலேயே 200 ரன்களை எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் முதலாவது ஓவர் மெய்டன் ஆனது. கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டது. மிடில் ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தது பின்னடைவாகி போனது. முக்கியமான தருணத்தில் ஆந்த்ரே ரஸ்செலின் கேட்ச்சை (7ரன்னில் இருந்த போது) நழுவ விட்டோம். எப்போதுமே இது போன்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே ரஸ்செல் அபாயகரமான ஒரு வீரர். கேட்ச்சை விட்டதற்கான பலனை அனுபவித்து விட்டோம்’ என்றார்.

டெல்லி அணி பவர் பிளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் இதுவரை 30 பவுண்டரிகளும், 14 சிக்சர்களும் வாரி வழங்கியுள்ளது. இந்த சீசனில் பவர்-பிளேயில் அதிக பவுண்டரி, சிக்சர் வழங்கிய அணி டெல்லிதான்.

Next Story