மும்பையிடம் தோல்வி: கடைசி ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது ஏமாற்றம் அளிக்கிறது - பயிற்சியாளர் வெட்டோரி


மும்பையிடம் தோல்வி: கடைசி ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது ஏமாற்றம் அளிக்கிறது - பயிற்சியாளர் வெட்டோரி
x
தினத்தந்தி 18 April 2018 11:30 PM GMT (Updated: 18 April 2018 9:09 PM GMT)

கடைசி கட்ட ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது ஏமாற்றம் அளிப்பதாக பயிற்சியாளர் வெட்டோரி கூறியுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையிடம் தோல்வி கண்ட பிறகு பேட்டி அளித்த பெங்களூரு அணியின் பயிற்சியாளர் வெட்டோரி, கடைசி கட்ட ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா (94 ரன், 10 பவுண்டரி, 5 சிக்சர்), இவின் லீவிஸ் (65 ரன்) அரைசதம் விளாசினர். அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலி தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. கோலி 92 ரன்களுடன் (62 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் 90 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவரான சுரேஷ் ரெய்னாவை (4,558 ரன்) முந்தி சாதனை படைத்த கோலி இதுவரை 4,619 ரன்கள் (163 ஆட்டம்) குவித்து இருக்கிறார். இதே போல் நடப்பு தொடரில் கோலி 4 ஆட்டங்களில் விளையாடி 201 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பதன் மூலம் அவர் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தினார். ஆனால் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில் அவர் இந்த தொப்பியை தயங்கியபடி தான் ஏற்றுக்கொண்டார்.

விராட் கோலி கூறுகையில், ‘அணி தோல்வியை சந்தித்த நிலையில் இப்போது ஆரஞ்சு நிற தொப்பியை அணிவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை அணிவதில் எந்த அர்த்தமும் இல்லை. விக்கெட்டுகளை மிக சுலபமாக பறிகொடுத்து விட்டோம். எங்களது வீரர்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை ஒன்றிரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால் எல்லா பெருமையும் மும்பை அணியின் அபார பந்து வீச்சுக்கே வழங்கப்பட வேண்டும். நாங்கள் முடிந்தவரை போராடினோம். ஆனால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை’ என்றார்.

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இது எங்களுக்கு அருமையான ஆட்டமாக அமைந்தது. பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டோம். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இவற்றில் இருந்து நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

இவின் லீவிஸ் அதிரடி காட்டுவதில் சிறந்தவர். ஏதுவாக வரும் பந்துகளை நொறுக்கி விடுவார். அவர் வேகமாக ரன்களை திரட்டியது எனக்கு நிலைத்து நின்று விளையாட உதவியது. எப்போதுமே ஏதாவது ஒரு பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம். அதை செய்வதற்குரிய அடித்தளத்தை லீவிஸ் எனக்கு உருவாக்கித் தந்தார்’ என்றார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு அணி, மும்பை அணிக்கு எதிராகவும் இறுதி கட்டத்தில் 70 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நிருபர்களிடம் கூறுகையில் ‘கடந்த இரு ஆட்டங்களில் கடைசி கட்டத்தில் எங்களது பந்து வீச்சு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பந்து வீச்சாளர்கள் தங்களது திறமைக்கு ஏற்ப செயல்படாததால் பேட்ஸ்மேன்களுக்கு சுமை அதிகமாகி விடுகிறது. அதாவது அதிகமான ரன்களை இலக்காக கொண்டு துரத்த வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. ஆனால் அவருக்கு எந்த பேட்ஸ்மேனும் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஆடவில்லை’ என்றார்.

மேலும் வெட்டோரி கூறுகையில், ‘ரோகித் சர்மாவும், இவின் லீவிசும் கொஞ்சம் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டியதால், எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும், விக்கெட்டை வீழ்த்துவதை காட்டிலும் ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பவுலிங் செய்தனர். ஆனால் மும்பை அணி நிறைய ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்ததால், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மயங்க் மார்கண்டே, குணால் பாண்ட்யா ஆகியோர் தாக்குதல் பந்து வீச்சை தொடுத்தனர். தைரியமாக பந்தை மேல்வாக்கில் தூக்கி வீசினர். சுழற்பந்து வீச்சில் இது தான் இவ்விரு அணிகளுக்கு இடையிலான வித்தியாசமாகும்’ என்றார்.

Next Story