ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 18 April 2018 11:45 PM GMT (Updated: 18 April 2018 9:18 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றியை ருசித்தது.

ஜெய்ப்பூர்,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் ராஜஸ்தானை பேட் செய்ய பணித்தார். இதன்படி கேப்டன் ரஹானேவும், டார்சி ஷார்ட்டும் ராஜஸ்தானின் இன்னிங்சை தொடங்கினர். கொல்கத்தா அணி பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் பந்துவீச்சு தாக்குதலை தொடுத்தது. முதல் 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெறும் 9 ரன் மட்டுமே எடுத்தது.

4-வது ஓவரை வீசிய மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினின் ஓவரில், ரஹானே தொடர்ந்து 4 பவுண்டரிகளை சாத்தி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இந்த ஒரே ஓவரில் மட்டும் 18 ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு கிட்டியது. முந்தைய ஆட்டங்களில் 4 ஓவர்களிலேயே அதிகபட்சமாக 18 ரன்களுக்கு மேல் வழங்காத நரின், இந்த ஆட்டத்தில் ஒரே ஓவரில் வள்ளலாக மாறிவிட்டார்.

ரஹானே-டார்சி ஷார்ட் ஜோடி ராஜஸ்தான் அணிக்கு நேர்த்தியான தொடக்கம் ஏற்படுத்தி தந்தது. 6.2 ஓவர்களில் அந்த அணி 50 ரன்களை தொட்டது. ஸ்கோர் 54 ரன்களை எட்டிய போது ரஹானே 36 ரன்களில் (19 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கால் சூப்பராக ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அதன் பிறகு ராஜஸ்தானின் ரன்வேகம் தணிந்தது. அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 7 ரன்னிலும், டார்சி ஷார்ட் 44 ரன்களிலும் (43 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), திரிபாதி 15 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். மேலும் சில விக்கெட்டுகள் சரிந்த போதிலும், கடைசி கட்டத்தில் ஜோஸ் பட்லரின் (24 ரன்) பங்களிப்புடன் ராஜஸ்தான் சற்று சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் நிதிஷ் ராணா, டாம் குர்ரன் தலா 2 விக்கெட்டுகளும், சாவ்லா, குல்தீப், ஷிவம் மாவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சுனில் நரின் 4 ஓவர்களில் 48 ரன்களை வழங்கினார். விக்கெட் கிடைக்கவில்லை. பின்னர் 161 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் (0) கவுதம் சுழலில் கிளன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து சுனில் நரினும், ராபின் உத்தப்பாவும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தியதுடன், வெற்றிப்பாதைக்கும் வழிவகுத்தனர். சுனில் நரின் 35 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ராபின் உத்தப்பா 48 ரன்களில் (36 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ராணா 35 ரன்களுடனும் (27 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இதன் மூலம் ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜஸ்தானின் சாதனை பயணமும் முடிவுக்கு வந்தது.

Next Story