கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல் + "||" + IPL Cricket: Is Chennai team going back to win Confrontation with Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
புனே,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் மராட்டிய மாநிலம் புனேயில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் கோதாவில் இறங்குகின்றன.


இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து இருக்க வேண்டியது. காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராடும் அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் சென்னையில் ஐ.பி.எல். நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி இந்த போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது.உள்ளூரில் ஆடுவது போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புனே ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் சென்னையில் இருந்து ஆயிரம் ரசிகர்கள் அணியை உற்சாகப்படுத்த புறப்பட்டு சென்றுள்ளனர்.

சென்னை அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் டோனியின் அதிரடியின் (79 ரன்) மூலம் இலக்கை நெருங்கிய சென்னை அணி துரதிர்ஷ்டவசமாக 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் சென்னை அணி வியூகங்களை வகுத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக டோனி ஆடினார். அந்த அனுபவம் இங்குள்ள ஆடுகளத்தன்மையை அறிந்து கொள்ள நிச்சயம் டோனிக்கு உதவிகரமாக இருக்கும். காயத்தால் அவதிப்பட்ட சுரேஷ் ரெய்னா நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்புள்ளது.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (டெல்லி, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. அந்த அணியும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரம் காட்டும். ராஜஸ்தான் அணியில் கேப்டன் ரஹானே (130 ரன்), சஞ்சு சாம்சன் (185 ரன்) நல்ல பார்மில் இருக்கிறார்கள். ஆனால் ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ரூ.11½ கோடிக்கு வாங்கப்பட்ட ஜெய்தேவ் உனட்கட் ஆகியோரின் செயல்பாடு எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லை.

எனவே அவர்கள் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள். ரூ.7.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இன்னும் களம் இறக்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் சென்னையும், 6-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

இரண்டு அணிகளின் வீரர்கள் பட்டியல்

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, முரளிவிஜய் அல்லது சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், ஷர்துல் தாகூர்.

ராஜஸ்தான்: ரஹானே, டார்சி ஷார்ட் அல்லது ஹென்ரிச் கிளாசென், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட், பென் லாக்லின் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...