என்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். காப்பாற்றப்பட்டு இருக்கிறது சதம் விளாசிய கெய்ல் தமாஷ்


என்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். காப்பாற்றப்பட்டு இருக்கிறது சதம் விளாசிய கெய்ல் தமாஷ்
x
தினத்தந்தி 20 April 2018 11:15 PM GMT (Updated: 20 April 2018 10:20 PM GMT)

என்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் காப்பாற்றப்பட்டு இருப்பதாக சதம் விளாசிய பஞ்சாப் வீரர் கெய்ல் தமாசாக கூறினார்.

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 58 பந்துகளில் சதத்தை எட்டிய தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 104 ரன்களுடன் (63 பந்து, ஒரு பவுண்டரி, 11 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் ரஷித்கானின் சுழற்பந்து வீச்சில் கெய்ல் 6 சிக்சர் விரட்டியதும் அடங்கும்.

தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணியால் 4 விக்கெட்டுக்கு 178 ரன்களே எடுக்க முடிந்தது. கேப்டன் வில்லியம்சன் (54 ரன்), மனிஷ் பாண்டே (57 ரன்) அரைசதம் அடித்தும் பிரயோஜனம் இல்லை. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் முதல் தோல்வி இதுவாகும்.

38 வயதான கிறிஸ் கெய்ல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் கெய்ல் ஒரு ஆட்டத்தில் 10-க்கும் மேல் சிக்சர் நொறுக்குவது இது 16-வது நிகழ்வாகும். வேறு எந்த வீரரும் இரண்டு முறைக்கு மேல் இத்தகைய சாதனையை படைத்தது இல்லை. அதே சமயம் ஐ.பி.எல்.-ல் அவர் அடித்த 6 சதங்களில் இது தான் அவரது மந்தமான (58 பந்து) சதம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தின் போது இரண்டு முறை கெய்லை எந்த அணியும் வாங்காமல் புறக்கணித்தன. 3-வது முறையாக ஏலம் விட்ட போது கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி அவரை ரூ.2 கோடிக்கு வாங்கியது நினைவு கூரத்தக்கது.

வெற்றிக்கு பிறகு கிறிஸ் கெய்ல் ஜாலியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலகின் எந்த இடத்திலும், எந்த அணிக்காக பங்கேற்றாலும் 100 சதவீதம் முழுதிறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற மனஉறுதியுடன் தான் எப்போதும் ஆடுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஐ.பி.எல். ஏலத்தில் தொடக்கத்தில் யாரும் என்னை எடுக்காத போது ‘கெய்ல் தனது திறமையை இன்னும் அதிகமாக நிரூபிக்க வேண்டி இருக்கிறது’ என்று நிறைய பேர் சொல்லி இருப்பார்கள். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், என்னை ஷேவாக் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர்) ஏலத்தில் தேர்வு செய்ததன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டை காப்பாற்றி இருக்கிறார்.

‘கெய்ல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி தேடித்தந்தால் போதும்; அவர் மீது செய்த முதலீட்டுத் தொகைக்கான பலனை அடைந்து விடுவோம்’ என்று ஷேவாக் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவரிடம் இன்னும் பேச விரும்புகிறேன். நடப்பு ஐ.பி.எல்.-ல் தொடரின் முதல் சதத்தை அடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மொகாலி அழகான ஆடுகளம். உள்ளூர் மைதானமான இங்கு எங்கள் அணிக்குரிய கடைசி போட்டி இதுதான். அதனால் இந்த ஆடுகளத்தை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது.

இங்கு யாருக்காகவும் எதையும் நிரூபிக்க நான் வரவில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் எல்லா சாதனைகளையும் நான் படைத்து விட்டேன். கிரிக்கெட்டை உற்சாகமாக அனுபவித்து விளையாடிக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவு தான். இந்த வெற்றியோடு எனது மகளின் 2-வது பிறந்த நாளையும் கொண்டாடப்போகிறேன் இவ்வாறு கெய்ல் கூறினார்.

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘இது ஒரு முழுமையான செயல்பாடு. முதலில் பேட் செய்து, அந்த ஸ்கோரை கொண்டு எதிரணியை மடக்க முயற்சித்தோம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். நாங்கள் இன்னும் கூடுதலாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

கெய்லின் பேட்டிங் மிக நேர்த்தியாக இருந்தது. அதிரடி ரன் குவிப்பு மூலம் ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றினார். சற்று உயரமாக சரியான அளவில் வந்த பந்துகளை எல்லாம் எல்லைக்கோட்டிற்கு பறக்க விட்டார். இது தான் அவருக்கும், மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் உள்ள வித்தியாசம். ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவரது இன்னிங்சை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது. அவரது ஸ்டைலில் மற்றவர்கள் ஆடுவது கடினம்’ என்றார்.

Next Story