ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை பந்தாடியது: சென்னை அணி 3-வது வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை பந்தாடியது: சென்னை அணி 3-வது வெற்றி
x
தினத்தந்தி 20 April 2018 11:30 PM GMT (Updated: 20 April 2018 10:40 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி 3-வது வெற்றி பெற்றது.

புனே,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்சை பந்தாடிய சென்னை அணி 3-வது வெற்றியை ருசித்தது. வாட்சன் சதம் அடித்தார்.

8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. இரு அணிகளிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

காயத்தில் இருந்து குணமடைந்த சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு திரும்பினார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முரளிவிஜய், ஹர்பஜன்சிங் கழற்றிவிடப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் டார்சி ஷார்ட், தவால் குல்கர்னி நீக்கப்பட்டு ஹென்ரிச் கிளாசென், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து ஷேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக களம் புகுந்தனர்.

முதல் ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பின்னி முதல் பந்தையே நோ-பாலாக வீசினார். அதன்பிறகு அடுத்தடுத்து இரு பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய வாட்சன், அதே ஓவரில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற திரிபாதி கோட்டை விட்டார். பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வாட்சன், அதிரடியில் வெளுத்து கட்டினார். உனட்கட்டின் ஓவரில் 2 சிக்சர்களை தூக்கினார். மறுமுனையில் அம்பத்தி ராயுடு 12 ரன்களில் (8 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

அடுத்து சுரேஷ் ரெய்னா நுழைந்தார். வாட்சன்-ரெய்னா கூட்டணி ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்தது. பென் ஸ்டோக்சின் பந்து வீச்சை பதம் பார்த்த ரெய்னா அவரது ஒரே ஓவரில் பலவிதமான ஷாட்டுகள் மூலம் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை பின்னியெடுத்து ரசிக்க வைத்தார். 9.5 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை தொட்டது. அணியின் ஸ்கோர் 131 ரன்களை (11.5 ஓவர்) எட்டிய போது ரெய்னா (46 ரன், 29 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டோனி (5 ரன்), சாம் பில்லிங்ஸ் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து வெய்ன் பிராவோ இறங்கினார்.

மறுபக்கம் நிலைத்து நின்று அட்டகாசப்படுத்திய வாட்சன் சதம் அடித்தார். ஆனால் ரெய்னா களத்தில் நின்ற வரை சென்னை அணியின் ஸ்கோர் 230 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது. அவர் வெளியேறியதும் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்து போய் விட்டது. வாட்சன் 106 ரன்கள் (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசிய நிலையில் கடைசி ஓவரில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பிராவோ 24 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி பயன்படுத்திய 6 பவுலர்களில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் சிக்கனத்தை காட்டினார். அவர் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென் முதல் ஓவரில் கொடுத்த சுலபமான கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற வாட்சன் தவற விட்டார். ஆனாலும் கிளாசென் (7 ரன்) குடைச்சல் கொடுக்காமல் அடுத்த ஓவரிலேயே நடையை கட்டினார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய சஞ்சு சாம்சன் (2 ரன்), கேப்டன் ரஹானே (16 ரன்) இருவருக்கும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ‘செக்’ வைத்தார். ஜோஸ் பட்லர் (22 ரன்), பென் ஸ்டோக்ஸ் (45 ரன்) போராட்டத்துக்கும் பலன் இல்லை.

ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு விழுந்த 3-வது அடியாகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத் சன்ரைசர்சை (மாலை 4 மணி) சந்திக்கிறது.

ரசிகர்கள் வருகை குறைவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்ததால் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்த 6 ஐ.பி.எல். ஆட்டங்கள் புனே நகருக்கு மாற்றப்பட்டது. ஆனால் சென்னையை போல் அங்கு ரசிகர்கள் படை அலைதிரண்டு வரவில்லை. சில கேலரிகள் வெறிச்சோடியே கிடந்தன. அதே நேரத்தில் வந்திருந்த கணிசமான ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை உற்சாகப்படுத்த தவறவில்லை. சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் புனேக்கு சென்றிருந்த ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் மஞ்சள் நிற உடையில் காட்சி அளித்தனர்.


வாட்சனின் 3-வது சதம்

*சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவரான 36 வயதான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனுக்கு இது 3-வது ஐ.பி.எல். சதமாகும். முன்பு ராஜஸ்தான் அணிக்காக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒரு சதம் சென்னைக்கு எதிராக (2013-ம் ஆண்டில் 101 ரன்) அடிக்கப்பட்டது ஆகும். இப்போது அப்படியே மாறியிருக்கிறது.

*இந்த சீசனில் எடுக்கப்பட்ட 2-வது சதமாக இது அமைந்தது. ஏற்கனவே பஞ்சாப் வீரர் கெய்ல் சதம் அடித்திருந்தார்.

*ஒட்டு மொத்தத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பதிவான 6-வது செஞ்சூரி இதுவாகும்.

Next Story