டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி


டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 21 April 2018 11:00 PM GMT (Updated: 21 April 2018 8:41 PM GMT)

டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றி பெற்றது.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றியை பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் சர்ப்ராஸ் கான் நீக்கப்பட்டு மனன்வோரா இடம்பெற்றார். டாஸ் ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. ஆட்டத்திற்கு முன்பாக பலத்த மழை பெய்திருந்ததால் ஈரப்பதமான ஆடுகளத்தில் பேட் செய்ய தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கவுதம் கம்பீர் (3 ரன், 10 பந்து) ஜாசன் ராய் (5 ரன், 16 பந்து) சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இந்த சீசனில் பவர்-பிளேயில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் இதுதான்.

இதன் பிறகு ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன், படிப்படியாக ஸ்கோரையும் உயர்த்தினர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் 52 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (4 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஆனாலும் ரிஷாப் பான்ட் அணி சவாலான நிலையை எட்டுவதற்கு உதவினார். அவர் தனது பங்குக்கு 85 ரன்கள் (48 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) திரட்டினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 71 ரன்கள் சேகரித்தனர். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணியில் மனன் வோரா 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 18 ரன்களிலும் (ரன்-அவுட்) வெளியேறினர். இதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும், டிவில்லியர்சும் கூட்டணி அமைத்து அணியை சிக்கலில் இருந்து மீட்டெடுத்தனர். கோலி 30 ரன்களில் (26 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அவர் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே டிரென்ட் பவுல்ட் ஒற்றைக்கையால் பிடித்து மெய்சிலிர்க்க வைத்தார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் 15 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.

மறுமுனையில் டிவில்லியர்ஸ்சின் ‘சரவெடி’ ரசிகர்களை பரவசப்படுத்தியது. பெங்களூரு அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. டிவில்லியர்ஸ் 90 ரன்களுடனும்(39 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), மன்தீப்சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Next Story