கிரிக்கெட்

டிரென்ட் பவுல்டின் பிரமிப்பான கேட்ச் - கோலி பரவசம் + "||" + Trent Bowln's awesome catch - Kohli ecstasy

டிரென்ட் பவுல்டின் பிரமிப்பான கேட்ச் - கோலி பரவசம்

டிரென்ட் பவுல்டின் பிரமிப்பான கேட்ச் - கோலி பரவசம்
டிரென்ட் பவுல்டின் பிரமிப்பான கேட்சினால் கோலி பரவசம் அடைந்தார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை தோற்கடித்தது. இதில் டெல்லி அணி நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட பெங்களூரு அணி 29 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும் டிவில்லியர்ஸ் (90 ரன், 39 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) அட்டகாசப்படுத்தி 2 ஓவர் மீதம் வைத்து வெற்றிகரமாக அணியை கரைசேர்த்தார். முன்னதாக கேப்டன் கோலி 30 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

2-வது வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘கடந்த ஆட்டத்தில் நான் எடுத்த 90 ரன்களை விட (துல்லியமாக சொல்வது என்றால் மும்பைக்கு எதிராக 92 ரன்) இந்த ஆட்டத்தில் எடுத்த 30 ரன்கள் பெரியது. ஏனெனில் இதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்னும் சில பகுதிகளை நாங்கள் சரி செய்ய வேண்டி உள்ளது. டிவில்லியர்ஸ் போன்ற வீரர் அணியில் இருக்கும் போது, அவர் எப்போதும் உங்களை மகிழ்ச்சி அடைய வைப்பார். இந்த ஆட்டத்தில் அவர் தனிநபராக ஆட்டத்தின் போக்கை சாதகமாக மாற்றிக்காட்டினார். இத்தகைய திறமை உடையவராக இருப்பதால் தான், அவர் உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார். போட்டியின் சூழலை நாங்கள் நன்கு புரிந்து வைத்திருந்தோம். 60-70 ரன்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்தால் வெற்றி பெற முடியும் என்று நம்பினோம். ஆனால் கடைசி வரை பேட் செய்ய முடியாமல் போனது வருத்தம் அளித்தது.

நான் அடித்த ஷாட்டை, டெல்லி பீல்டர் டிரென்ட் பவுல்ட் கேட்ச் செய்த விதத்தை கண்டு (எல்லைக்கோடு அருகே துள்ளிகுதித்து ஒற்றைக்கையால் பந்தை பிடித்து கீழே விழுந்த பவுல்ட், லைன் மீது உடல் உரசாமல் இருக்க தலையை புத்திசாலித்தனமாக தூக்கியதால் கேட்ச்சாக மாறியது) அசந்து போனேன். அதுவும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இது நடந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த கேட்ச்சை திரும்பி பார்க்கும் போது, அவுட் ஆனதற்காக கவலைப்பட வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு அது பிரமிப்பான ஒரு கேட்ச்’ என்றார்.