டி வில்லியர்ஸ் பேட்டிங் ‘வெறித்தனமான தாக்குதல்’ - டெல்லி அணி கேப்டன் காம்பீர்


டி வில்லியர்ஸ் பேட்டிங்  ‘வெறித்தனமான தாக்குதல்’ - டெல்லி அணி கேப்டன் காம்பீர்
x
தினத்தந்தி 23 April 2018 12:21 PM GMT (Updated: 23 April 2018 12:21 PM GMT)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ் ஆட்ட முறை ‘வெறித்தனமான தாக்குதல்’ என டெல்லி அணி கேப்டன் காம்பீர் கூறியுள்ளார். #RCBvDD #Gambhir


ஐபிஎல் தொடரின் 19-வது ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் களம் இறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது.

குயின்டான் டி காக் (18), மனன் வோரா (2), விராட் கோலி (30), கோரி ஆண்டர்சன் (15) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், டி வில்லியர்ஸ் தனி ஒரு மனிதனாக நின்று அணியை வெற்றிபெற வைத்தார். 39 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 90 ரன்கள் எடுக்க 18 ஓவரிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இலக்கை எட்டியது.

டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் காம்பீரும் மிரண்டுள்ளார்.

டி வில்லியர்ஸ் அதிரடி குறித்து காம்பீர் கூறுகையில் ‘‘தற்போதைய சூப்பர் ஃபார்மில் உள்ள கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ் ஆகியோரால் ஜிஎஸ்டி மற்றும் அதன் தாக்கத்தை நீக்க நமக்கு உதவி செய்ய முடியும். அல்லது நார்த் கொரியா அதிபர் மேஜையில் உள்ள பட்டனை நீக்க உதவ முடியும் (நகைச்சுவையாக). ஆர்சிபிக்கு எதிராக பந்து வீச்சாளர்கள் பீல்டிங்கை செட் செய்து எங்கே பந்து வீசலாம், எப்படி பந்து வீசலாம் என்று ஆராய்ந்து பந்து வீசினால், அதை துச்சமாக மதித்து டி வில்லியர்ஸ் பந்தை துவம்சம் செய்து விடுகிறார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் ஆர்சிபி அணிக்கெதிராக தோற்கவில்லை. டி வில்லியர்ஸ்க்கு எதிராக தோல்வியடைந்தது. டி வில்லியர்ஸ் 10 பவுண்டரி, ஐந்து சிக்சர்கள் விளாசினார். டி வில்லியர்ஸின் ஆட்ட முறை ‘வெறித்தனமான  தாக்குதல்’ போன்றது.

இப்படி அழைப்பதற்கு காரணம் உண்டு. அருகில் இருந்து அவரை ஆட்டத்தை பார்த்தீர்கள் என்றால், வெறித்தனமான  தாக்குதல் என்பதை சரியானதாக இருக்கும். முதலில் நதீம் பந்தை ஸ்லாக்-ஸ்வீப்ஸ் பகுதியில் விளாசினார். அதன்பின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் ஜம்ப் செய்து நிலையான நின்று பைன் லெக் திசையில் தூக்கினார். டி வில்லியர்ஸின் மேஜிக் ரிஷப் பந்த், அய்யர் அதிரடியை மறக்கடிக்க செய்துவிட்டது’’ என்றார்.


Next Story