கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? இன்று பலப்பரீட்சை + "||" + IPL Cricket For Hyderabad team Will be retaliated in Mumbai Today is a test

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை? இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை,

8 அணிகளுக்கு இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக முதல் 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. அடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. புள்ளிபட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி இனிவரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்ற ஆட்டங்களில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து வருகிறார். அவர் இதுவரை 5 ஆட்டங்களில் 54 ரன்களே எடுத்துள்ளார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான் மற்றும் ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் பாண்ட்யா சகோதரர்கள் பேட்டிங்கில் இன்னும் ஜொலிக்கவில்லை. பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் மும்பை அணி உள்ளது.

கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்டு நல்ல தொடக்கம் கண்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் வீழ்ந்து புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.

ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை 230 ரன்கள் குவித்து இருக்கிறார். ஆனால் ஷிகர் தவான் பேட்டிங் கைகொடுக்கவில்லை. விருத்திமான் சஹா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவர் 62 ரன்களே எடுத்து இருக்கிறார். அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதானின் ஆட்டமும் எதிர்பார்ப்பை விட குறைவாகவே உள்ளது. பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப மும்பை அணி முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி சரிவில் இருந்து மீண்டு வர ஐதராபாத் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு. மும்பை இந்தியன்ஸ்: சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ், இஷான் கிஷன், பொல்லார்ட், ரோகித் சர்மா (கேப்டன்), குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, மெக்லெனஹான், மயங் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்: ரிக்கி புய், கனே வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல்-ஹசன், யூசுப் பதான், விருத்திமான் சஹா, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல்.