ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் வெற்றி
x
தினத்தந்தி 23 April 2018 11:15 PM GMT (Updated: 23 April 2018 8:14 PM GMT)

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் நேற்று இரவு நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக அவேஷ்கானும், ஷபாஸ் நதீமுக்கு மாற்றாக அமித் மிஸ்ராவும் மற்றும் பிரித்வி ஷா, டேனியல் கிறிஸ்டியன், பிளங்கெட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பஞ்சாப் அணியில் உடல் நலக்குறைவு காரணமாக அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பிடித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் (2 ரன்) அவேஷ்கான் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் துல்லியமாக செயல்பட்ட பிளங்கெட் பந்து வீச்சை அடித்து ஆடிய லோகேஷ் ராகுல் (23 ரன்கள், 15 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) அவேஷ்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதைத்தொடர்ந்து கருண்நாயர் களம் கண்டார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. மயங்க் அகர்வால் (21 ரன்) பிளங்கெட் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் இறங்கிய யுவராஜ்சிங் (14 ரன்கள், 17 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அவேஷ்கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து டேவிட் மில்லர், கருண்நாயருடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 15 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருண்நாயர் (34 ரன்கள், 32 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) பிளங்கெட் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து டேவிட் மில்லர் 19 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் டேனியல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் பிளங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் கேப்டன் அஸ்வின் (6 ரன்), ஆன்ட்ரூ டை (3 ரன்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பரிந்தர் ஸ்ரன் ரன் எதுவுமின்றி ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் பிளங்கெட் 3 விக்கெட்டும் (4 ஓவரில் 17 ரன் கொடுத்து) டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான் தலா 2 விக்கெட்டும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா 22 ரன்னிலும், மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், கேப்டன் கம்பீர் 4 ரன்னிலும், ரிஷாப் பான்ட் 4 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் 6 ரன்னிலும், ராகுல் திவேதியா 24 ரன்னிலும், பிளங்கெட் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் (57 ரன்கள், 45 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) கடைசி பந்தில் அவுட் ஆனார். பஞ்சாப் அணி தரப்பில் அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான், ஆன்ட்ரூ டை தலா 2 விக்கெட்டும், பரிந்தர் ஸ்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

6-வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

Next Story