பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததால் தோல்வி டெல்லி கேப்டன் கம்பீர் சொல்கிறார்


பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுகள் வேகமாக சரிந்ததால் தோல்வி டெல்லி கேப்டன் கம்பீர் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 April 2018 9:00 PM GMT (Updated: 24 April 2018 8:41 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தி 5–வது வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தி 5–வது வெற்றியை பதிவு செய்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை கூட எட்ட முடியாமல் திணறிய டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 139 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதில் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினால் ‘டை’, சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் முஜீப் ரகுமானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் அய்யர் (57 ரன்) பந்தை தூக்கியடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தித்த 33–வது தோல்வி இதுவாகும். குறிப்பிட்ட மைதானத்தில் ஒரு அணி கண்ட அதிகபட்ச தோல்வி இது தான்.

5–வது தோல்விக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘முதல் 6 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து விட்டு, சரிவில் இருந்து மீண்டு ஜெயிப்பது என்பது எப்பொழுதும் கடினமானதாகும். தொடக்க விக்கெட்டுகளை விரைவில் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. எங்களது பந்து வீச்சு உண்மையிலேயே அருமையாக இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் தங்கள் பணியை நிறைவாக செய்யவில்லை. நாங்கள் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய 8 ஆட்டங்களில் 7–ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.’ என்றார்.


Next Story