கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்:டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை + "||" + The teams. Cricket: Tony-Kohli teams Today Showdown

ஐ.பி.எல். கிரிக்கெட்:டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்:டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு (புதன்கிழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. சென்னை அணியில் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, வாட்சன், அம்பத்திராயுடு ரன் திரட்டுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பந்து வீச்சில் இளம் வீரர் தீபக் சாஹர், வெய்ன் பிராவோ, ஷர்துல் தாகூர் கைகொடுக்கிறார்கள். இந்த கூட்டணியின் ஆதிக்கம் நீடித்தால் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

கோலி- டிவில்லியர்ஸ்

நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும் பெங்களூரு அணியிடம் தடுமாற்றம் காணப்படுகிறது. கேப்டன் விராட் கோலி (231 ரன்), டிவில்லியர்ஸ் (212 ரன்) தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2 வெற்றியும் (பஞ்சாப், டெல்லிக்கு எதிராக) டிவில்லியர்ஸ் அரைசதங்கள் அடித்த ஆட்டங்களில் தான் கிடைத்தது. ஆனால் டோனி அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் விராட் கோலியிடம் இருந்து அதிகமான ஆக்ரோஷத்தை எதிர்பார்க்கலாம். அதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 7-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. பெங்களூரு மைதானத்தில் சந்தித்த 6 ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் தலா 3-ல் வெற்றி பெற்றன.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

பெங்களூரு: குயின்டான் டி காக், மனன் வோரா, விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், மன்தீப்சிங், கோரி ஆண்டர்சன் அல்லது கிரான்ட்ஹோம், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் அல்லது குல்வந்த் கெஜ்ரோலியா, யுஸ்வேந்திர சாஹல்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.