கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடருமா?மும்பையுடன் இன்று மீண்டும் மோதல் + "||" + Chennai Super Kings team Will dominate?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடருமா?மும்பையுடன் இன்று மீண்டும் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் தொடருமா?மும்பையுடன் இன்று மீண்டும் மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
புனே, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.

சென்னை-மும்பை மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒரு தோல்வி (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில்) 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணியின் உள்ளூர் ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டாலும் அந்த அணி வெற்றிகளை குவித்து வருகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் விசுவரூபம் எடுக்க தவறுவதில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை அணி 206 ரன் இலக்கை அசத்தலாக எட்டிப்பிடித்து வியக்க வைத்தது. அந்த ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு, கேப்டன் டோனி ஆகியோர் அரை சதத்தை கடந்து கம்பீரம் காட்டினார்கள்.

ரோகித் சர்மா சோபிக்கவில்லை

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி (பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம்) 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. மும்பை அணியின் பேட்டிங் சொதப்பல் தொடருகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா, அதன் பிறகு எந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அடுத்த 5 ஆட்டங்களில் அவர் மொத்தம் 20 ரன்களே எடுத்தார். சூர்யகுமார் யாதவ் மட்டுமே பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார்.

பொல்லார்ட், இவின் லீவிஸ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து வருகின்றனர். முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 118 ரன்னில் ஐதராபாத்தை கட்டுப்படுத்தினாலும் அந்த எளிய இலக்கை கூட மும்பை அணியால் எட்ட முடியாமல் போனது. மும்பை அணி 87 ரன்னில் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. பந்து வீச்சிலும் மும்பை அணியின் ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டால், மற்ற வீரர்கள் அவருக்கு பக்கபலமாக இல்லாத நிலை தான் நீடிக்கிறது. மும்பை அணி வீரர் மயங்க் மார்கண்டே இதுவரை 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

பதிலடி கொடுக்குமா?

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் மும்பை-சென்னை அணிகள் இதுவரை 23 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 12 முறையும், சென்னை அணி 11 தடவையும் வெற்றி கண்டுள்ளன. இந்த சீசனில் மும்பையில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர முழு பலத்தையும் வெளிப்படுத்தும். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருசேர சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்த ஆட்டத்தில் ரன் குவிப்புக்கு குறைவு இருக்காது எனலாம்.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

மும்பை இந்தியன்ஸ்: சூர்யகுமார் யாதவ், இவின் லீவிஸ், இஷான் கிஷன், ரோகித் சர்மா (கேப்டன்), குணால் பாண்ட்யா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, மெக்லெனஹான், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

ஆசிரியரின் தேர்வுகள்...