கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல் + "||" + The IPL Cricket: Chennai-Delhi teams Confrontation today

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்:
சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
புனே, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை-டெல்லி மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி (பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்) கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் வீழ்ந்தது. அந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

வலுவான பேட்டிங்

சென்னை அணியின் பேட்டிங்கில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, டோனி ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்பஜன்சிங், வெய்ன் பிராவோ கச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சு எடுபடவில்லை. தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த 2 வாரம் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரண்ஷர்மா களம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில்), 5 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

ஸ்ரேயாஸ் அய்யர்

டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் அடுத்தடுத்து அரை சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், காலின் முன்ரோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் பதவியில் இருந்து விலகிய சீனியர் வீரர் கம்பீர் கடந்த ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்), ராகுல் திவேதியா (6 விக்கெட்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி முயற்சிக்கும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டியது அவசியமானது என்பதால் தனது வெற்றியை நீட்டிக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த சீசனில் இரு அணிகளும் சந்திப்பது இது முதல்முறையாகும். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், கரண்ஷர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் அல்லது டேவிட் வில்லி.

டெல்லி டேர்டெவில்ஸ்: பிரித்வி ஷா, காலின் முன்ரோ, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, பிளங்கெட், அமித்மிஸ்ரா, அவேஷ்கான், டிரென்ட் பவுல்ட்.