சென்னை அணியை வீழ்த்தியது மும்பை: ‘எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்’ மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


சென்னை அணியை வீழ்த்தியது மும்பை: ‘எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்’ மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x
தினத்தந்தி 29 April 2018 9:15 PM GMT (Updated: 29 April 2018 7:09 PM GMT)

‘சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாங்கள் எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்’ என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

புனே, 

‘சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாங்கள் எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்’ என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

பழிதீர்த்தது மும்பை

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பழிதீர்த்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டம் இழக்காமல் 75 ரன்னும், அம்பத்தி ராயுடு 46 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், குணால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் ஆடிய மும்பை அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து அபார வெற்றியை ருசித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சூர்யகுமார் யாதவ் 44 ரன்னும், இவின் லீவிஸ் 47 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஹர்பஜன்சிங், வெய்ன் பிராவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

நம்பிக்கை அளிக்கும்

ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றிக்கு பிறகு அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றியின் மூலம் எங்கள் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும். கடந்த ஆட்டங்களில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதி முடிவு வெற்றிகரமாக அமையாமல் போனது. இந்த ஆட்டத்தில் எல்லா துறையிலும் (பேட்டிங், பவுலிங், பீல்டிங்) எங்களது ஆட்டம் சிறப்பாக அமைந்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம். பெரும்பாலான ஆட்டங்களில் 190 ரன்களுக்கு மேல் குவித்தோம். இந்த வெற்றி நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண நல்ல நம்பிக்கையை அளிக்கும். அணிக்கு பொருத்தமான வீரர்கள் தேர்வு எது? என்பதை கேப்டனாக நான் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பொல்லார்ட்டை ஆடும் லெவன் அணியில் சேர்க்காமல் விட்டது கடினமான முடிவாகும். அவர் எங்களுக்கு நல்ல பல வெற்றிகளை தேடிக் கொடுத்து இருக்கிறார். அவரை அணியில் இருந்து முழுமையாக நீக்க நாங்கள் விரும்பவில்லை. அவர் இன்னும் எங்களது மேட்ச் வின்னராகவே இருக்கிறார். ஆட்டத்தின் சூழ்நிலை கருதி இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்கள் களம் காண வேண்டும் என்பதால் தான் பேட்டிங் வரிசையில் நான் முன்கூட்டியே களம் இறங்கினேன்’ என்று தெரிவித்தார்.

Next Story