கிரிக்கெட்

மோசமாக பீல்டிங் செய்தால் வெற்றி பெற முடியாது - கேப்டன் விராட்கோலி கருத்து + "||" + You can not win if you do poorly - Captain Virath koli

மோசமாக பீல்டிங் செய்தால் வெற்றி பெற முடியாது - கேப்டன் விராட்கோலி கருத்து

மோசமாக பீல்டிங் செய்தால் வெற்றி பெற முடியாது - கேப்டன் விராட்கோலி கருத்து
கொல்கத்தா அணியிடம் மீண்டும் பெங்களூரு தோல்வி அடைய மோசமான பீல்டிங்கே காரணம் என கேப்டன் விராட்கோலி கூறினார்.
பெங்களூரு,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மீண்டும் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி ஆட்டம் இழக்காமல் 68 ரன்னும் (44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன்), பிரன்டன் மெக்கல்லம் 38 ரன்னும் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் ஆட்டம் இழக்காமல் 62 ரன்னும் (52 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ராபின் உத்தப்பா 36 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ், எம்.அஸ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த சீசனில் கொல்கத்தா அணி 2-வது முறையாக பெங்களூருவை சாய்த்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. கொல்கத்தா அணி வீரர் கிறிஸ் லின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


தோல்வி குறித்து பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘ஒவ்வொரு முறை நாங்கள் பேட் செய்யும் போதும் இந்த ஆடுகளம் புதிய தன்மையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறது. நாங்கள் விளையாடும் போது இருந்ததை விட பார்க்கும் போது ஆடுகளம் நன்றாக இருப்பது போல் தெரிந்தது. 175 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். இதுபோல் நாங்கள் பீல்டிங் செய்தால் வெற்றி பெற தகுதியற்றவர்களாக தான் இருக்க முடியும். நாங்கள் இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் நாங்கள் அதிக தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த ஆட்டத்தில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. இனிவரும் 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றால் தான் நாங்கள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும். இனிவரும் எல்லா ஆட்டங்களையும் நாங்கள் அரைஇறுதி போல் நினைத்து விளையாட வேண்டும். சரியான தருணத்தில் வீரர்கள் தங்களது ஆட்ட தரத்தை உயர்த்த வேண்டியது அவசியமாகும். இதனை அனைத்து வீரர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...