கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்; சரிவில் இருந்து மீளுமா மும்பை? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல் + "||" + IPL Cricket; Reboot from Mumbai Confrontation with Punjab team today

ஐ.பி.எல். கிரிக்கெட்; சரிவில் இருந்து மீளுமா மும்பை? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்; சரிவில் இருந்து மீளுமா மும்பை? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று பஞ்சாப் - மும்பை அணிகள் மோத உள்ளது.
இந்தூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தூரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு அரங்கேறும் 34-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் எல்லா வீரர்களும் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை 7 ஆட்டத்தில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் நல்ல நிலையில் உள்ளது.

பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (268 ரன்கள்), கெய்ல் (252 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் ஆன்ட்ரூ டை (9 விக்கெட்), அங்கித் ராஜ்பூத் (7 விக்கெட்), முஜீப் ரகுமான் (7 விக்கெட்) ஆகியோர் சவால் அளிக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

3 முறை சாம்பியனான மும்பை அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை அணியின் தொடக்க ஆட்டம் இதுவரை சரியாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க பந்து வீச்சும் மோசமாகவே உள்ளது. பவர்பிளேயில் அதிக ரன்களை வாரி வழங்கி வருகிறார்கள். இதுவே மும்பை அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (283 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மா (196 ரன்கள்), இவின் லீவிஸ் (194 ரன்கள்) ஆகியோர் நல்ல நிலையில் இருந்தாலும், ஒருவர் அடித்தால் மற்றவர் விரைவில் ஆட்டம் இழக்கும் நிலையே நிலவுகிறது. ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் ஹர்திக் பாண்ட்யா கடந்த லீக் ஆட்டத்தில் அரை சதம் அடித்தாலும் முந்தைய ஆட்டங்களில் அவர் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை.

பந்து வீச்சில் மெக்லெனஹான் (9 விக்கெட்), முஸ்தாபிஜூர் ரகுமான் (7 விக்கெட்) ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினாலும், ரன்னை கட்டுப்படுத்தும் விதமாக சிக்கனமாக பந்து வீசாததும் மும்பை அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது. மயங்க் மார்கண்டே (11 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (9 விக்கெட்) ஆகியோர் நன்றாக பந்து வீசி வருகிறார்கள்.

முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் தோல்வி கண்ட மும்பை அணி எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி ஒரு வார இடைவெளிக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. ஒருங்கிணைந்த அணியாக ஆடி சரிவில் இருந்து மும்பை அணி மீளுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 10 முறையும், பஞ்சாப் அணி 10 தடவையும் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.