பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் - கேப்டன் டோனி


பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் - கேப்டன் டோனி
x
தினத்தந்தி 4 May 2018 11:15 PM GMT (Updated: 4 May 2018 7:19 PM GMT)

பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என கேப்டன் டோனி தெரிவித்தார்.

கொல்கத்தா,

‘பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்’ என்று கொல்கத்தா அணியிடம் கண்ட தோல்விக்கு பிறகு சென்னை அணி கேப்டன் டோனி தெரிவித்தார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டோனி ஆட்டம் இழக்காமல் 43 ரன்னும் (25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன்), ஷேன் வாட்சன் 36 ரன்னும், சுரேஷ் ரெய்னா 31 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணி தரப்பில் பியுஷ் சாவ்லா, சுனில் நரின் தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றியை தனதாக்கியது. அதிகபட்சமாக சுப்மான் கில் ஆட்டம் இழக்காமல் 57 ரன்னும் (36 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டம் இழக்காமல் 45 ரன்னும் (18 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), சுனில் நரின் 32 ரன்னும் (20 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். சென்னை அணி தரப்பில் நிகிடி, கே.எம்.ஆசிப், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். 2 விக்கெட் வீழ்த்தியதுடன் 32 ரன்னும் எடுத்த கொல்கத்தா வீரர் சுனில் நரின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘ஆடுகளத்தின் தன்மை மாறாமல் நிலையாக இருந்து இருக்குமானால் நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானது தான். 2-வது பாதியில் ஆடுகளத்தின் தன்மை மாறி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் இன்னும் சற்று கூடுதலாக ரன்கள் எடுத்து இருந்தால் அணிக்கு உதவிகரமாக இருந்து இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது பந்து வீச்சு சரியாக அமையவில்லை. எந்த பந்து வீச்சாளரும் சிறப்பாக பந்து வீசவில்லை.

இதனால் கடைசி வரை பந்து வீச்சாளர்களை மாற்றி கொண்டு இருந்தேன். பந்து வீச்சு நன்றாக இல்லாததால் போட்டி விரைவில் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தை மாற்றி பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்களின் பலத்தை உணர்ந்து அதற்கு தகுந்தபடி தங்களது பந்து வீச்சில் பவுலர்கள் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். பீல்டிங்கில் நாங்கள் மோதிய விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. பீல்டிங்கில் வேகமாக செயல்பட வேண்டியது அவசியம். பீல்டிங்கை பொறுத்தமட்டில் வேகமாக செயல்படுவதற்கு நல்ல உதாரணம் மைக் ஹஸ்சி. பீல்டிங்கில் கணித்து துரிதமாக செயல்பட்டால் தான் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்’ என்று தெரிவித்தார்.

வெற்றிக்கு பிறகு கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவிக்கையில், ‘19 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்கள் நிறைய பேரை அணிக்கு தேர்வு செய்ததற்காக அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சுப்மான் கில் அதிரடியாக ஆடினார். சிறப்பு வாய்ந்த வீரரான அவர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கூடுதல் நெருக்கடி கொடுக்க நான் விரும்பவில்லை. சுழற்பந்து வீச்சு எடுபடும் என்பதால் முன்கூட்டியே சுழற்பந்து வீச்சாளர்களை பந்து வீச வைத்தோம். எங்களது பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்கள். சுனில் நரின் ஆல்-ரவுண்டராக அருமையாக செயல்படுகிறார்’ என்றார்.

Next Story