‘பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு


‘பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’ கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
x
தினத்தந்தி 5 May 2018 11:15 PM GMT (Updated: 5 May 2018 7:03 PM GMT)

பஞ்சாப் அணியை வீழ்த்தியது மும்பை: பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 50 ரன்னும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டம் இழக்காமல் 29 ரன்னும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, மயங் மார்கண்டே, பென் கட்டிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி கண்டது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் (42 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னும் (15 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), குணால் பாண்ட்யா 31 ரன்னும் (12 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது அரை சதம் அடித்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘இந்த வெற்றியின் மூலம் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நாங்கள் இன்னும் நீடிக்கிறோம். இந்த வெற்றி எங்களுக்கு தேவையானதாக இருந்தது. எங்களது பந்து வீச்சு தொடக்கம் முதலே சிறப்பாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களை அதிக ரன்கள் குவிக்க விடாமல் தடுத்தது சிறப்பான செயல்பாடாகும். சேசிங் செய்கையிலும் நாங்கள் அருமையாக விளையாடினோம். ரன் ரேட்டை அதிகரிக்கவே நான் பின்வரிசையில் இறங்கி, ஹர்திக் பாண்ட்யாவை முன்கூட்டியே களம் இறக்கினோம். கடைசி கட்டத்தில் நாங்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பதை குறைக்க வேண்டியது அவசியமானதாகும். திட்டமிட்டபடி எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றி உத்வேகத்தை நாங்கள் வரும் ஆட்டங்களிலும் தொடர வேண்டும்’ என்றார்.

Next Story