‘10 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்’- டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி


‘10 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்’- டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
x
தினத்தந்தி 6 May 2018 10:45 PM GMT (Updated: 6 May 2018 9:09 PM GMT)

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்

ஐதராபாத், 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் டெல்லி அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு மங்கியது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 65 ரன்னும் (36 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னும் (36 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. அலெக்ஸ் ஹாலெஸ் 45 ரன்னும் (31 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஷிகர் தவான் 33 ரன்னும் (30 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மனிஷ் பாண்டே 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் கனே வில்லியம்சன் 32 ரன்னும் (30 பந்துகளில் ஒரு சிக்சருடன்), யூசுப் பதான் 27 ரன்னும் (12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். 163 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். மேலும் 10 ரன்கள் சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். ஆடுகளம் கடினமாக இருந்தது. பந்து அதிகம் திரும்பவில்லை. அவேஷ்கான் பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. அமித் மிஸ்ரா பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. கேட்ச் வெற்றியை தேடி கொடுக்கும். எங்களது பீல்டிங்கை மேம்படுத்த பயிற்சி மேற்கொண்டோம். இருப்பினும் நெருக்கடியில் சில கேட்ச்களை கோட்டை விட்டு விட்டோம். நாங்கள் கடைசி வரை வெற்றிக்காக போராடினோம்’ என்றார்.

Next Story