டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு


டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2018 10:45 PM GMT (Updated: 7 May 2018 9:18 PM GMT)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு,

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. மேலும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (ஜூன் 27 மற்றும் 29-ந் தேதி) ஆடுகிறது. இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி ஜூன் 22-ந் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் இன்று நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட்கோலி விளையாட வாய்ப்பில்லை. இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிளப் அணியான சுர்ரேவுக்காக ஆடுவதால் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அத்துடன் அவர் அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவது கடினம் தான்.

டெஸ்ட் அணியில் விராட்கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. டெஸ்ட் போட்டி அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்படலாம். கவுண்டி போட்டியில் விளையாடி வரும் புஜாரா, இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிக்காக நாடு திரும்புகிறார்கள். அயர்லாந்துடனான 20 ஓவர் போட்டி தொடருக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக பொறுப்பு வகிக்கக்கூடும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடரில் தான் விராட்கோலி இந்திய அணியினருடன் இணைவார் என்று தெரிகிறது.

‘விராட்கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா இல்லையென்றால் அக்‌ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா ஆடாவிட்டால் விஜய் சங்கர் என்று மாற்று வீரர்கள் வாய்ப்பு உள்ளது’ என்று இந்திய அணியின் தேர்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் நடைபெறும் இரண்டு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்படும் அம்பத்தி ராயுடுவின் பெயரும் பரிசீலனை செய்யப்படலாம்.

இந்திய ‘ஏ’ அணியில் இளம் வீரர்கள் பிரித்வி ஷா, சுப்மான் கில், ஷிவம் மாவி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். டெஸ்ட் அணியில் வழக்கமாக இடம் பெறும் 7 வீரர்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும், இங்கிலாந்து சென்று அந்த நாட்டுக்கு எதிரான போட்டி தொடருக்காக விளையாட தங்களை தயார்படுத்துவார்கள்.

Next Story