கிரிக்கெட்

ஐபிஎல்: 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் + "||" + Rajasthan Royals won by 15 runs

ஐபிஎல்: 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல்: 15 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வீழ்ந்தது. #IPL
ஜெய்ப்பூர்,

ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.

ராஜஸ்தான் அணியின் பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 1 ரன்னில் வெளியேற, அடுத்ததாக வழக்கத்திற்கு மாறாக கேப்டன் அஸ்வின் களமிறங்கினார். இவரும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்ட அடுத்து களமிறங்கிய கருண் நாயர் (3 ரன்கள்), அக்‌ஷ்தீப் நாத் (9 ரன்கள்) ஆகியோரும் ஒற்றை ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், மறுமுனையில் லோகேஷ் ராகுல் ராஜஸ்தான் அணியினரின் அற்புதமான பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு நிதானமான ஆடி வந்தார். இந்நிலையில் 13.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி பறிதவிக்க, லோகேஷ் ராகுலுடன் மார்கஷ் ஸ்டோனிஷ் கை கோர்த்தார். இருவரும் ராஜஸ்தான் அணியினர் நேர்த்தியான பந்துவீச்சில் ரன்களை குவிக்க திணறினர். இதனிடையே கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த அணியால் 32 ரன்களே சேர்க்க முடிந்தது. இறுதியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணியின் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக கிருஷ்ணப்பா கெளதம் 2 விக்கெட்டுகளையும், உனட்கட், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்செர், சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை தனது சொந்த மண்ணான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.