டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக முதல் சதத்தை பதிவு செய்த வீரர்


டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக முதல் சதத்தை பதிவு செய்த வீரர்
x
தினத்தந்தி 15 May 2018 1:51 AM GMT (Updated: 15 May 2018 1:51 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக கெவின் ஓ’பிரியன் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். #KevinO'Brien #IreVsPak

டப்ளின்,

2000-ம் ஆண்டு முழுநேர டெஸ்ட் அந்தஸ்து பெற்ற வங்கதேச அணிக்கு பிறகு கடந்த ஆண்டு அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியிருந்தது. 

இந்நிலையில் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட்டில் டப்ளின் நகரில் உள்ள மலாஹைடு மைதானத்தில் இளம் வீரர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியுடன் கடந்த மே 11-ந் தேதி மோதியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் சேர்த்து டிக்ளெர் செய்தது. பின்னர் அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, தொடந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.

2-வது இன்னிங்ஸில் மிகவும் பொறுப்புடன் ஆடிய அயர்லாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியினர் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்து வந்தனர். இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த நட்சத்திர வீரர் கெவின் ஓ’பிரியன் டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து அணியின் சார்பாக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 186 பந்துகளை எதிர்கொண்ட கெவின் சதம் அடித்து அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். 34 வயதாகும் கெவின் ஓ’ பிரியன் கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் வெறும் 50 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களை குவித்து, 139 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. அந்த அணியின் கெவின் ஓ’பிரியன் 118 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story