கிரிக்கெட்

எல்லா வகையிலும் நேர்த்தியாக செயல்பட்டோம் - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி + "||" + We all work fine - interviewed by Bengal team captain Virath kohli

எல்லா வகையிலும் நேர்த்தியாக செயல்பட்டோம் - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி

எல்லா வகையிலும் நேர்த்தியாக செயல்பட்டோம் - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி
பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் எல்லா வகையிலும் நேர்த்தியாக செயல்பட்டோம் என பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கூறினார்.
இந்தூர்,

‘பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எல்லா வகையிலும் நாங்கள் நேர்த்தியாக செயல்பட்டோம்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி பெருமிதத்துடன் கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. இந்த எளிதான இலக்கை பெங்களூரு அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது. கேப்டன் விராட்கோலி 48 ரன்னும், பார்த்தீவ் பட்டேல் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


விராட்கோலி இந்த சீசனில் இதுவரை 514 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அவர் 5 சீசனில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். டேவிட் வார்னர் 4 முறை 500 ரன்களை தாண்டி இருக்கிறார்.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘கடந்த ஒரு வாரமாக பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. ஒரு கட்டத்தில் ‘பிளே-ஆப்’ சுற்றில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டதாகவே நினைத்தேன். அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளால் எங்களுக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது எங்களுக்கு தேவை எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டும். நிகர ரன்-ரேட் விகிதம் நன்றாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் எங்களது செயல்பாடு எல்லாவகையிலும் நேர்த்தியாக இருந்தது.

சிறிய மைதானமான இங்கு பஞ்சாப் அணி தங்களது தொடக்க பேட்டிங் வரிசையை வைத்து எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் தவறு இழைக்காமல் சிறப்பாக பந்து வீசி அவர்களின் விக்கெட்டை வீழ்த்தினார்கள். உமேஷ் யாதவ், அவர்களின் தொடக்க ஆட்டக்காரர் இருவரையும் (லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல்) ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். பஞ்சாப் அணியில் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் இடம் பெறாததால் அவர்கள் அதிக ரன் குவிக்க முயற்சிப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். வெற்றியில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது. முந்தைய லீக் ஆட்டத்தில் 180 ரன்களை சேசிங் செய்து இருந்ததால் இந்த ஆட்டத்துக்கு நல்ல உத்வேகத்துடன் வந்தோம். நாங்கள் அடுத்த சுற்று பற்றி அதிகம் சிந்திக்காமல், சரியான மனஉறுதியுடன் இருக்க வேண்டியது முக்கியமானது’ என்றார்.

தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் கூறுகையில், ‘இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் தொழில்முறை வீரர்களுக்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களது ஆட்ட திறனை நாங்கள் மேம்படுத்தி கொள்ள வேண்டும். நிகர ரன் விகிதத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். எங்களிடம் பந்து வீச்சு நன்றாக உள்ளது. ஆனால் அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்கள் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை. அடுத்த ஆட்டத்தில் மும்பை அணியை வீட்டுக்கு அனுப்ப முயற்சிப்போம்.’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...