சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்


சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 17 May 2018 11:30 PM GMT (Updated: 17 May 2018 8:47 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும்.

அம்பத்தி ராயுடு (சதம் உள்பட 535 ரன்), ஷேன் வாட்சன் (சதம் உள்பட 424 ரன்), கேப்டன் டோனி (3 அரைசதத்துடன் 413 ரன்), சுரேஷ் ரெய்னா (3 அரைசதத்துடன் 315 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகிறார்கள். பேட்டிங் தான் சென்னை அணியின் பிரதான பலமாக இருக்கிறது.

பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (11 விக்கெட்), வெய்ன் பிராவோ (9 விக்கெட்), தீபக் சாஹர் (7 விக்கெட்) ஆகியோர் ஓரளவு கைகொடுக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் (தலா 7 விக்கெட்) இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 180 ரன்கள் இலக்கை எளிதில் சேசிங் செய்த சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் 9-வது வெற்றியை நோக்கி களம் இறங்க காத்திருக்கிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். அந்த சோகம் இந்த முறையும் தொடருகிறது. 3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. ஆனாலும் அந்த அணி வீரர்கள் தொடரை உயர்ந்த நிலையில் முடிக்க விரும்புவார்கள். அதுவும் உள்ளூரில் ஆடுவதால் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க தீவிரம் காட்டுவார்கள்.

டெல்லி அணிக்கு பேட்டிங் வரிசை வலுவாகவே காணப்படுகிறது. நடப்பு தொடரில் அந்த அணி 6 முறை 180 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறது. ரிஷாப் பான்ட் (582 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (386 ரன்), பிரித்வி ஷா (216 ரன்) ஆகியோர் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (15 விக்கெட்) தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை. இதே போல் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லும் (10 ஆட்டத்தில் 142 ரன்) ஜொலிக்காதது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, டேவிட் வில்லி அல்லது நிகிடி, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

டெல்லி: பிரித்வி ஷா, ஜாசன் ராய், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா அல்லது ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story