டிவில்லியர்ஸ், ஸ்பைடர்மேனுடன் ஒப்பிட்டு கோலி புகழாரம்


டிவில்லியர்ஸ், ஸ்பைடர்மேனுடன் ஒப்பிட்டு கோலி புகழாரம்
x
தினத்தந்தி 18 May 2018 11:15 PM GMT (Updated: 18 May 2018 7:28 PM GMT)

ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் கேட்ச் செய்த விதத்தை ஸ்பைடர்மேனுடன் ஒப்பிட்டு பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி பாராட்டி இருக்கிறார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் (69 ரன்), மொயீன் அலி (65 ரன்) ஆகியோர் அரை சதம் அடித்தனர். பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. கேப்டன் கனே வில்லியம்சன் 81 ரன்னும், மனிஷ் பாண்டே ஆட்டம் இழக்காமல் 62 ரன்னும் குவித்தாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை. பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹாலெஸ் (37 ரன்), மொயீன் அலியின் பந்து வீச்சில் அடித்த ஒரு பந்து பவுண்டரியை தாண்டி சிக்சருக்கு செல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் டிவில்லியர்ஸ் அபாரமாக துள்ளிக்குதித்து ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்து விட்டு எல்லைக்கோட்டின் அருகில் தடுமாற்றமில்லாமல் தரை இறங்கியது அனைவரையும் ஆச்சரிப்படுத்தியது. இந்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் பிடித்த விதம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டது.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ், மொயீன் அலி பேட்டிங் அபாரமாக இருந்தது. கிரான்ட்ஹோமும் சிறப்பாக செயல்பட்டார். அலெக்ஸ் ஹாலெஸ் அடித்த பந்தை டிவில்லியர்ஸ் கேட்ச் செய்த விதம் ஸ்பைடர்மேன் (சிலந்தி மனிதன்) சாகசத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது. சாதாரண மனிதர்களால் எல்லாம் அந்த மாதிரி கேட்ச் செய்ய முடியாது. நான் அந்த பந்து சிக்சருக்கு செல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் அதனை டிவில்லியர்ஸ் அற்புதமாக துள்ளிப்பிடித்து லாவகமாக கேட்ச் செய்தது பிரமிப்பாக இருந்தது. இதேபோல் பேட்டிங்கில் அவரது ஷாட்கள் இன்னும் கூட என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பீல்டிங்கும் நம்ப முடியாத வகையில் உள்ளது. இதுபோன்ற பல ஆட்டங்களை நாங்கள் சந்தித்து இருந்ததால் உணர்ச்சிகள் கட்டுக்குள் தான் இருந்தன. 2-வது பேட்டிங்கின் போதும் ஆடுகளம் நன்றாக தான் இருந்தது. பனிப்பொழிவு இருந்தாலும் பவுலர்கள் பொறுமையாக பந்து வீசி வெற்றியை தேடித் தந்தார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்தார்.

Next Story