டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்


டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்
x
தினத்தந்தி 19 May 2018 8:09 AM GMT (Updated: 19 May 2018 8:09 AM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக அசத்திக்கொண்டிருக் கிறார், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்.

ட்டை வீச்சிலும், பந்து வீச்சிலும் சென்னை அணி அதிகம் எதிர்பார்க்கும் வீரர்களில் ஒருவராக விளங்கும் ஷேன் வாட்சனுடன் ஒரு சந்திப்பு...

நீங்கள் உங்கள் கிரிக்கெட் வாழ்வில் இரண்டாவது வசந்தத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறலாமா?

இது எனது இரண்டாவது வசந்தமா என எனக்குத் தெரியவில்லை. காரணம் நான் என் கிரிக்கெட் வாழ்வில் ஏற்கனவே சில வசந்தங்களைச் சந்தித்திருக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்வில் இக்காலகட்டத்திலும் நன்றாக விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பிக் பாஷ் லீக்’ தொடங்கி நான் கடந்த நான்கைந்து மாதங்களாகவே நன்றாக விளையாடி வருகிறேன். எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு ஐ.பி.எல். ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர். கடந்த சில ஆண்டுகள் எனக்குச் சரியாக அமையாத நிலையில், மீண்டும் என் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். வலுவான தலைமை கொண்ட சென்னை அணியில் ஆடும் வாய்ப்பை நான் மிகவும் ரசிக்கிறேன்.

நீங்கள் 2008 ஐ.பி.எல். சீசன் பற்றிக் கூறினீர்கள். அதன் பிறகு உங்களுக்கு இந்த சீசன்தான் சிறப்பாக அமைந்திருக்கிறதா?

அதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக இது எனது சிறந்த ஐ.பி.எல். சீசன்களில் ஒன்று. எனக்குத் தற்போது கிடைத்திருக்கும் பேட்டிங் வாய்ப்புக்காக நான் டோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உலகிலேயே சிறந்த 20 ஓவர் போட்டித் தொடரில் இம்மாதிரியான வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும்போது, வழக்கமாக அது அவரது கிரிக்கெட் வாழ்வின் முடிவாக அமைந்துவிடும். அப்படி இல்லாதவகையில் நான் அதிர்ஷ்டசாலி.

இந்த சீசனில் உங்களை இவ்வளவு சிறப்பாக ஆட வைத்திருப்பது எது?

இந்த ஐ.பி.எல்.லுக்கு முந்தைய காலகட்டம் ஒரு காரணம். கடந்த செப்டம்பரில் நான் பேட்டிங், பவுலிங்கில் நல்ல நிலைக்கு வந்தேன். எனக்கு ‘பிக் பாஷும்’ நன்றாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவர் தான் ஈடுபட்டிருக்கும் விஷயத்தில் முடிவை நெருங்கும்போது கிடைக்கும் வாய்ப்பை ரசித்து அனுபவிக்க வேண்டும். அதைத்தான் தற்போது நான் செய்கிறேன்.

நீங்கள் ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே. அணியில் ஆடும் அனுபவத்தையும், மற்ற அணிகளில் ஆடிய அனுபவத்தையும் எப்படிக் கூறுவீர்கள்?

சி.எஸ்.கே. ஒரு மிகச் சிறந்த அணி. இதன் ரசிகர் தளமும், டோனியின் ரசிகர் தளமும் மிகவும் வலுவானவை. ஐ.பி.எல். ஆட்டங்களில் நான் மற்ற அணிகளில் ஆடிய அனுபவமும் அருமையானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியதன் மூலம் எனக்குச் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அங்கு சில அற்புதமான நட்புகளும் உருவாகின. காலம் நகர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. பெங்களூரு அணியில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் விளையாடியதும் மறக்க முடியாதது. சென்னை அணி அனுபவம், தனித்துவமானது.

உங்களுக்குத் தலைமை வகித்த பிற கேப்டன்களுடன் டோனியை எப்படி நீங்கள் மதிப்பீடு செய்வீர்கள்?

நான் ஆஸ்திரேலிய அணிக்கும், மற்ற அணிகளுக்கும் விளையாடியபோதே டோனியை கவனித்திருக்கிறேன். அவர் ரொம்பவும் அமைதியாகவும் மென்மையாகவும் இருக்கிறார் என்று நினைத்தேன். களத்தில் அவருக்கு எதிராக விளையாடியபோது எப்படி இருந்ததோ, அப்படித்தான் அவருடன் இணைந்து விளையாடும்போதும் இருக்கிறது. பல சிக்கலான நேரங்களில் எங்கள் அணியை அவர் மீட்டிருக்கிறார். தன் மீதான எதிர்பார்ப்பையும் நெருக்கடியையும் எப்படிக் கையாளுவது என்று டோனிக்குத் தெரியும்.

டோனியும் தனது இரண்டாவது சிறந்த காலகட்டத்தில் இருப்பதாக நினைக்கிறீர்களா?

எப்போதும் போல டோனி நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருக்கிறார். அவரது அதிரடியான ஷாட்டுகள் அபாரம். இன்னும் இரண்டாண்டுகளுக்காவது அவரால் நன்றாக கிரிக்கெட் விளையாட முடியும் என்று தோன்றுகிறது. பலருக்கும் அவர் ஒரு சிறந்த ஊக்கமாகத் திகழ்கிறார்.

சென்னை அணி, ‘மூத்தவர்களின் படை’ என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால் நீங்களும், டோனி, ராயுடு, பிராவோ போன்றோரும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே?

அனுபவத்துக்கு ஈடு இணையில்லை. தவிர, அனுபவமிக்க வீரர்கள் நெருக்கடியான நிலையிலும் சீராக விளையாடுவார்கள். மனரீதியான விருப்பம் வலுவாக இருக்கும்போது, அனுபவம் நிறைந்த அணி நன்றாக ஆடும். அத்துடன், எனக்குப் பயிற்சியளித்த சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் ஸ்டீபன் பிளெமிங். இதெல்லாம் அதிர்ஷ்டத்தால் அமைவதல்ல. தேர்ந்தெடுத்து ஒன்றுபடுத்துவதால் உருவாவது. அப்படி சென்னை அணிக்காக சிறந்த வீரர்களை சரியாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

களத்தில் நிறைய காயங்களைச் சந்தித்தவர் நீங்கள். காயத்தால் அவதிப்படும் வீரர்களுக்கு நீங்கள் எதுவும் அறிவுரை கூற விரும்புகிறீர்களா?

எனக்குப் பெரும் சவாலாக இருந்தவை, காயங்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சவால் இருக்கும். சிறந்த வீரராகத் திகழ வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். எப்போதும் நாம் விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. காயமடைந்த காலத்தில் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஐ.பி.எல். முதலாவது தொடரில் நீங்கள் நட்சத்திர வீரராக இருந்தீர்கள். இது 11-வது தொடர். இத்தொடர் எவ்வளவு தூரம் வளர்ந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

ஆரம்பத்தில், பார்ட்டி அது இது என்று கொஞ்சம் கவர்ச்சியாக இருந்தது. தற்போது இத்தொடர் மேலும் மேலும் வலுவாகிக்கொண்டே போகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கும் இது பெரிய அளவில் நன்மை புரிந்திருக்கிறது.

எந்த வகையில்...?

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவி செய்திருக்கிறதே. டெல்லியின் பிரித்வி ஷா, சுப்மான் கில், கொல்கத்தாவின் ஷிவம் மாவி போன்றோர் பிரகாசித்து வருகிறார்களே?

இன்னும் சில காலம் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

இல்லை. என்னால் முடிந்த அளவு ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக ஆடிவிட்டேன்.

கடைசியாக, சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை கலக்கிய சர்ச்சைகள் குறித்து?

அதுபற்றி நிறையப் பேசியும் எழுதியும் ஆகிவிட்டது. எனவே நான் அதைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. 

Next Story