ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார்? சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார்? சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 21 May 2018 11:30 PM GMT (Updated: 21 May 2018 10:58 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2018

மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு (செவ்வாய்க்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.

இந்த சீசனில் 7 எதிரணிகளையும் குறைந்தது ஒருமுறையாவது வீழ்த்திய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு ஆண்டு தடை காலத்துக்கு பிறகு திரும்பிய சென்னை அணியில் 30 வயதுக்கு மேல் அதிக வீரர்கள் இடம் பெற்றிருந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை சென்னை வீரர்கள் நிரூபித்து காட்டிவிட்டனர்.

அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (446 ரன்), ஷேன் வாட்சன் (438 ரன்), சுரேஷ் ரெய்னா (4 அரைசதத்துடன் 391 ரன்) ஆகியோர் சென்னை அணியின் பேட்டிங் தூண்களாக திகழ்கிறார்கள். இதில் டோனி 9 முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும். இவர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டை சுழட்டினாலே சென்னை அணி கணிசமான ஸ்கோரை குவித்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (14 விக்கெட்), நிகிடி (9 விக்கெட்), தீபக் சாஹர் (9 விக்கெட்) ஆகியோர் கைகொடுக்கிறார்கள். ஆல்- ரவுண்டர் வெய்ன் பிராவோ 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 10.15 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த முறை ஐதராபாத் அணி தாக்குப்பிடிப்பது கடினம் என்று கூறப்பட்ட நிலையில், கனே வில்லியம்சன் தலைமையில் அந்த அணி எழுச்சி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து பிரமாதப்படுத்தியது. பேட்டிங்கில் ஐதராபாத் அணியின் ஆணிவேராக விளங்கும் வில்லியம்சன் 8 அரைசதத்துடன் 661 ரன் சேர்த்து முத்திரை பதித்துள்ளார். அவருக்கு ஷிகர் தவான் (4 அரைசதத்துடன் 437 ரன்), மனிஷ் பாண்டே (276 ரன்) பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களைத் தான் அந்த அணி முழுமையாக நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் சித்தார்த் கவுல் (17 விக்கெட்), ரஷித்கான் (16 விக்கெட்), சந்தீப் ஷர்மா (9 விக்கெட்), புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டங்களில் பந்து வீச்சில் அச்சுறுத்திய ஐதராபாத் பவுலர்கள், கடைசி 4 ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கி விட்டனர். இதனால் ஐதராபாத் அணி பந்து வீச்சை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்.

மேலும் கடைசி மூன்று லீக்கில் வரிசையாக தோல்வி கண்ட அந்த அணி மீண்டும் முழு உத்வேகத்துக்கு திரும்புவதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாகி வருகிறது.

இரு அணிகளும் சரிசமபலத்துடன் இருப்பது போல் தெரிந்தாலும், இந்த ஆண்டில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் முறையே 4 ரன் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது. இதனால் சென்னை அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். 7-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்குமா? அல்லது முந்தைய தோல்விக்கு ஐதராபாத் அணி பழிதீர்க்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச்சுற்றை எட்டும் அதே வேளையில், தோல்வி அடையும் அணி வெளியேறாது. அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நிகிடி.

ஐதராபாத்: அலெக்ஸ் ஹாலெஸ், ஷிகர் தவான், வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, யூசுப் பதான் அல்லது தீபக் ஹூடா, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஷகிப் அல்-ஹசன், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.

இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story