‘குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்’ ஐதராபாத் பவுலர் ரஷித்கான் பேட்டி


‘குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்’ ஐதராபாத் பவுலர் ரஷித்கான் பேட்டி
x
தினத்தந்தி 26 May 2018 9:15 PM GMT (Updated: 26 May 2018 9:04 PM GMT)

2–வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 175 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 8.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் நல்ல நிலையிலேயே இருந்தது. ஆனால் நிதிஷ் ராணா (22 ரன்) ரன்–அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. மேலும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 3 முன்னணி விக்கெட்டுகளை சாய்க்க, கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது.

10 பந்தில் 34 ரன், 3 விக்கெட், 2 கேட்ச் என்று ஆல்–ரவுண்டராக ஜொலித்து அட்டகாசப்படுத்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் 19 வயதான ரஷித்கான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், ‘சில தினங்களுக்கு முன்பு எங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன். என்னிடம் இருந்து இத்தகைய செயல்பாடு மிகவும் தேவையாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறைகளிலும் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தவே எப்போதும் முயற்சிக்கிறேன். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் எனது பங்களிப்பை அளிக்க முடியாமல் போகும் போது, அடுத்து எனது கவனம் பீல்டிங் மீது இருக்கும்’ என்றார்.


Next Story