கிரிக்கெட்

உள்நாட்டு போட்டியில் விளையாட வார்னர், பான் கிராப்ட்டுக்கு அனுமதி + "||" + Warner and Pan Grafted to play in domestic competition

உள்நாட்டு போட்டியில் விளையாட வார்னர், பான் கிராப்ட்டுக்கு அனுமதி

உள்நாட்டு போட்டியில் விளையாட வார்னர், பான் கிராப்ட்டுக்கு அனுமதி
ஜூலை மாதம் முதல் உள்நாட்டு போட்டியில் விளையாட வார்னர், பான் கிராப்ட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் ஜூலை மாதம் முதல் உள்நாட்டு போட்டியில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதமும், பான் கிராப்ட்டுக்கு 9 மாதமும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. மேலும் உள்நாட்டு போட்டியில் விளையாடவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் 3 பேரும் தங்கள் பிராந்தியத்துக்கு உட்பட்ட கீழ் மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்று பயிற்சி செய்து வந்தனர்.


இந்த நிலையில் ஜூலை மாதம் தொடக்கத்தில் கனடாவில் நடைபெறும் 20 ஓவர் போட்டியில் விளையாட ஸ்டீவன் சுமித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. தற்போது உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் விளையாட டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்து இருக்கிறது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் நடைபெறும் அங்கீகாரம் பெற்ற 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி லீக் தொடரில் பங்கேற்கிறார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்த பிறகு இருவரும் அங்கீகரிக்கப்பட்ட போட்டியில் விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும். வடக்கு பிராந்திய லீக் போட்டி தொடரில் பான் கிராப்ட் எல்லா ஆட்டங்களிலும் கலந்து கொள்கிறார். டேவிட் வார்னர் குறிப்பிட்ட சில ஆட்டங்களில் மட்டும் விளையாடுகிறார்.

இது குறித்து ஆஸ்திரேலிய வடக்கு பிராந்திய கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜோயல் மோரிஸன் கருத்து தெரிவிக்கையில், ‘டேவிட் வார்னர், பான் கிராப்ட் ஆகியோர் எங்களது போட்டியில் விளையாடுவதை நினைத்து பெருமைப்படுகிறோம். இவர்களின் அனுபவம் உள்நாட்டு வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார். வருங்காலங்களில் வெளிநாட்டு மற்றும் சிட்னி கிளப் போட்டியில் இணைந்து விளையாடவும் டேவிட் வார்னர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.