டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர்


டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர்
x
தினத்தந்தி 31 May 2018 8:27 AM GMT (Updated: 31 May 2018 8:27 AM GMT)

தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசனுக்கான வீரர்கள் தேர்வில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரரான விஜய் சங்கரை தேர்வு செய்துள்ளது. #TNPL

சென்னை:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. கடந்த ஆண்டு நடந்த 2-வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

3-வது தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்‘ 20 ஓவர் போட்டி ஜூலை 11-ந்தேதி தொடங்குகிறது.

இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டிபேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்கள் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது.

ஒவ்வொரு அணியும் ஏற்கனவே 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி எஸ்.கார்த்திக், ஆர்.அலெக்சாண்டர், சசிதேவ் ஆகிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. மற்ற அணிகள் தக்க வைத்த வீரர்கள் விவரம்:

சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ் சும்ரா, கணேஷ் மூர்த்தி (டூட்டி பேட்ரியாட்ஸ்), ரோகித், பிரதோஷ் ரஞ்சன் பால், அஜித் ராம் (கோவை).

அருண்கார்த்திக், ஷிஜித் சந்திரன், கார்த்திகேயன் (மதுரை), இந்திரஜித், பரத் சங்கர், விக்னேஷ் (திருச்சி வாரியர்ஸ்), அபராஜித், சிலம்பரசன், சஞ்சய்யாதவ் (காஞ்சி வீரன்ஸ்).

ஆர்.அஸ்வின், ஜெகதீசன், விவேக் (திண்டுக்கல்), ஷாஜகான், ராஜ்குமார், மோகன் பிரசாத் (காரைக்குடி).

ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்கள் எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்குட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

டி.என்.பி.எல். போட்டிக்காக மொத்தம் 772 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து உள்ளனர். வீரர்கள் தேர்வு நிகழ்ச்சியை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் உள்பட அனைத்து அணிகள் உரிமையாளர்களும் வீரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.

முதல் சுற்றில் வாஷிங்டன் சுந்தரை டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தேர்வு செய்து தக்க வைத்துக்கொண்டது. சர்வதேச வீரரான அவர் ஆல்ரவுண்டர் வரிசையில் முத்திரை பதித்து வருகிறார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சர்வதேச வீரரான விஜய் சங்கரை தேர்வு செய்தது. 26 வயதான அவர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே போல பந்து வீச்சிலும் சாதித்தவர்.

3-வதாக அந்தோணிதாசை கோவை அணி எடுத்தது. அவர் கடந்த 2 சீசனிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடியவர். சி.வி. வருணை மதுரை அணியும், எம்.எஸ். சஞ்சய்யை திருச்சி வாரியர்ஸ் அணியும், லோகேஸ்வரை காஞ்சி அணியும், சதுர்வேதியை திண்டுக்கல் அணியும் தேர்வு செய்தன.

இந்திய அணியிலும், ஐ.பி.எல்.லிலும் முத்திரை பதித்த சர்வதேச வீரர் தினேஷ் கார்த்திக்கை காரைக்குடி காளை அணி தேர்வு செய்தது. அவர் கடந்த இரண்டு டி.என்.பி.எல். போட்டியிலும் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடியவராவார்.

2-வது சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோபிநாத்தை தேர்வு செய்து தக்க வைத்துக் கொண்டது. இதேபோல டூட்டி பேட்ரியாட்ஸ் கவுசிக் காந்தியை தேர்வு செய்து தக்க வைத்தது.

டி.நடராஜன் (கோவை), அபிஷேக் தன்வார் (மதுரை). சோனு யாதவ் (திருச்சி வாரியர்ஸ்) விஷால் வைத்யா (காஞ்சி வீரன்ஸ்) ஹரி நிஷாந்த் (திண்டுக்கல்), அணிருதா (காரைக்குடி) ஆகியோர் 2-வது சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது சுற்றில் முருகன் அஸ்வினை தேர்வு செய்தது. இவர் ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடியவர். சிறந்த சுழற்பந்து வீரர் ஆவார்.

4-வது சுற்றில் ஹரீஷ் குமாரையும் 5-வது சுற்றில் கங்கா ஸ்ரீதர் ராஜூவையும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தேர்வு செய்தது.

டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 3-வது சுற்றில் சாய் கிஷோரையும், 4-வது சுற்றில் ஆர்.சதீசையும், 5-வது சுற்றில் அதிசயராஜ் டேவிட்சனையும் தேர்வு செய்தது. இதில் சாய்கிஷோரும் ஆர்.சதீசும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஆடியவர்கள்.

சர்வதேச வீரரான அபினவ் முகுந்தை 3-வது ரவுண்டில் கோவை அணி தேர்வு செய்தது. அவர் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிக்காக ஆடியவர். விக்னேஷ், ஷாருக்கான் ஆகியோரை அடுத்த சுற்றுகளில் அந்த அணி தேர்ந்து எடுத்தது.

மதுரை அணி ரகீல்ஷா, தலைவன் சற்குணம், கவுசிக் ஆகியோரை 3-வது, 4-வது மற்றும் 5-வது சுற்றில் முறையே தேர்வு செய்தது.

திருச்சி வாரியர்ஸ் அணி சர்வதேச வீரரான முரளி விஜய்யை தேர்வு செய்தது. அவர் கோவை அணிக்காக ஆடினார். அந்த அணி அடுத்த சுற்றுகளில் கணபதி, சுரேஷ்குமார் ஆகியோரை எடுத்தது.

காஞ்சி வீரன்ஸ் அணி ஹவுசிக் சீனிவாஸ், சுப்பிரமணிய சிவா, முகிலேஷ் ஆகியோரையும், அணிருதா சீதாராம், முகமது, ரோகித் ஆகியோரை திண்டுக்கல்லும் தேர்வு செய்தது.

காரைக்குடி காளை அணியோ மகேஷ், கவின், சூர்யபிரகாஷ் ஆகியோரை தேர்வு செய்தது.

Next Story