சென்னை அணியில் தோனிக்கு முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிக்கு காரணம் - கவுதம் காம்பீர்


சென்னை அணியில் தோனிக்கு முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிக்கு காரணம் - கவுதம் காம்பீர்
x
தினத்தந்தி 31 May 2018 11:16 AM GMT (Updated: 31 May 2018 11:16 AM GMT)

தோனிக்கு சென்னை சூப்பர் கிங் அணியில் முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கான காரணம் என காம்பீர் குறிபீட்டு உள்ளார்.

புதுடெல்லி

ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளில் ஆட்டம் தொடர்பான விவகாரங்களில் உரிமையாளர்களின் தலையீடு இருப்பதை கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார்.

இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின்  ஆட்டம் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு நடந்த எந்த போட்டியிலும் ஆடவில்லை.

காம்பீர் விலகிய பிறகு டெல்லி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக்கப்பட்டார். ஆனால், டெல்லி அணி பிளே ஆபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள காம்பீர், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை விமர்சித்து எழுதியுள்ளார்.

அதில், அதிகமான பணம் புழங்கும் தொழிலாக ஐபிஎல் உள்ளது. வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களின் ஊதியம், பயணம், தங்கும் செலவு என அதிகமான பணத்தை உரிமையாளர்கள் செலவிடுகின்றனர். இவற்றையெல்லாம் பேலன்ஸ் ஷீட்டில் கணக்கிடலாம். ஆனால் ஈகோ என்ற ஒன்றை பேலன்ஸ் ஷீட்டில் காட்ட முடியாது. பெரும்பாலான அணி உரிமையாளர்கள் ஐபிஎல்லை கடந்து அவர்களின் தொழிலில் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். கிரிக்கெட் வீரர்களை போன்றே அவர்களும் தோல்வியை விரும்புவதில்லை.

வலுவான ஒரு அணியிடம் தோல்வியை தழுவும்போது, ஒரு கிரிக்கெட் வீரராக அந்த தோல்வியை வீரர்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் அணியின் உரிமையாளர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. இரக்கமற்ற அந்த உரிமையாளர்களுக்கு முதலீடு செய்ததை திரும்ப பெறுவதுதான் முக்கியம்.

களத்தில் அணியின் விவகாரங்களில் உரிமையாளர்கள் தலையிட்டால், உங்களால் அவர்களை குறைகூற முடியுமா? ஆனால் ஐபிஎல் அணிகளில் சென்னை அணியில் மட்டும் தான் அணி நிர்வாகிகளின் தலையீடு கிடையாது. அந்த அணிக்கு எல்லாமே தோனி தான். தோனி எடுப்பதுதான் முடிவு. அதில் அணி நிர்வாகத்தின் தலையீடு இருக்காது. தோனி தான் சென்னை அணியின் பாஸ். தோனிக்கு அந்த அணி முழு சுதந்திரம் கொடுத்தது தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கான காரணம் என காம்பீர் எழுதியுள்ளார்.

Next Story