லார்ட்ஸ் டி-20: 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐசிசி உலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி


லார்ட்ஸ் டி-20: 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐசிசி உலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி
x
தினத்தந்தி 1 Jun 2018 1:59 AM GMT (Updated: 1 Jun 2018 1:59 AM GMT)

லார்ட்ஸ் டி-20 போட்டியில் 72 வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐசிசி உலக லெவன் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. #LordsT20 #WindiesWon

லார்ட்ஸ்,

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக லெவன் அணியும், வெஸ்ட்இண்டீஸ் அணியும் மோதின. ஒரே ஒரு டி-20 போட்டியான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உலக லெவன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. உலக லெவன் அணியினரின் பந்து வீச்சை மிக நேர்த்தியான எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தனர். அந்த அணியின் அதிகபட்சமாக எவின் லெவிஸ் 58 ரன்கள் எடுத்தார். உலக லெவன் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், அப்ரிடி மற்றும் சோயிப் மாலில் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐசிசி உலக லெவன் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் மற்றும் ரோஞ்சி ஆகியோர் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே பெவிலியன் திரும்பினர். அடுத்ததாக களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையை கட்ட உலக லெவன் அணி வெறும் 8 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் அந்த அணியின் பெரேரா (61 ரன்கள்) தவிர அனைவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் திறமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதால் உலக லெவன் அணி, 16.4 ஓவரில் 127 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீசின் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 72 வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐசிசி உலக லெவன் அணியை வீழ்த்தியது. 

Next Story