கிரிக்கெட்

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி + "||" + Asian Cup Women's 20 Over Cricket: Bangladesh team India's shock defeat

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேச அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி
பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

கோலாலம்பூர்,

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்னும், தீப்தி ‌ஷர்மா 32 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் ருமனா அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி கண்டது. பர்கானா 52 ரன்னுடனும், ருமனா அகமது 42 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்த்ராகர், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக, வங்காளதேச பெண்கள் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 6 முறை சாம்பியனான இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் சந்தித்த முதல் தோல்வி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியா, தாய்லாந்து அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து இருந்த இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். வங்காளதேச அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோல்வி கண்டு இருந்த வங்காளதேச அணி 2–வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

இன்றைய ஆட்டங்கள்

மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை எளிதில் தோற்கடித்து முதல் வெற்றியை தனதாக்கியது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் வங்காளதேசம்–தாய்லாந்து, மலேசியா–பாகிஸ்தான், இந்தியா–இலங்கை (காலை 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.