ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 3–வது வெற்றி இலங்கையை தோற்கடித்தது


ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 3–வது வெற்றி இலங்கையை தோற்கடித்தது
x
தினத்தந்தி 7 Jun 2018 9:30 PM GMT (Updated: 7 Jun 2018 8:49 PM GMT)

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 3–வது வெற்றியை ருசித்தது.

கோலாலம்பூர்,

பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 3–வது வெற்றியை ருசித்தது.

ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்

6 அணிகள் பங்கேற்றுள்ள 7–வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா ஆட்டம் இழக்காமல் 46 ரன்னும், யசோதா மென்டிஸ் 27 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் எக்தா பிஸ்த் 2 விக்கெட்டும், கோஸ்வாமி, அனுஜா பட்டீல், பூனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்திய அணி வெற்றி

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மந்தனா 12 ரன்னிலும், மிதாலி ராஜ் 23 ரன்னிலும் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 4–வது விக்கெட்டுக்கு அனுஜா பட்டீல், வேதா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

18.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேதா கிருஷ்ணமூர்த்தி 29 ரன்னுடனும், அனுஜா பட்டீல் 19 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் ஆட்டநாயகி விருது பெற்றார். நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் 8 ரன்னை தொட்ட போது 20 ஓவர் போட்டியில் 2,000 ரன்களை எட்டினார். 74 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ள மிதாலி ராஜ் 2,015 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

பாகிஸ்தான் அணி வெற்றி

மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை விரட்டியடித்தது. இன்னொரு லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தாய்லாந்தை எளிதில் தோற்கடித்தது.

4 லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தலா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முறையே முதல் 3 இடங்கள் வகிக்கின்றன. இலங்கை அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4–வது இடமும், தாய்லாந்து அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 5–வது இடமும், எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்ட மலேசியா அணி கடைசி இடத்திலும் உள்ளன.

அடுத்த ஆட்டங்கள்

நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் இந்தியா–பாகிஸ்தான் (காலை 7 மணி), இலங்கை–தாய்லாந்து, மலேசியா–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.


Next Story