வருமானத்தில் பங்கு கேட்கும் மாநில அரசு ; விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு


வருமானத்தில் பங்கு கேட்கும்  மாநில அரசு ; விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Jun 2018 10:38 AM GMT (Updated: 8 Jun 2018 10:38 AM GMT)

அரியானா மாநில விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு விளம்பரம் மற்றும் விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒப்படைக்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் 

அரியானா மாநில  அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் மாநில விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு விளம்பரம் மற்றும் விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளது.

 அரியானா மாநிலம் சார்பில் பங்கேற்கும் வீரர்கள், விளம்பரத்தில் நடிக்கும் வீரர்கள், அரசின் பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள், விளையாட்டு மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மாநில விளையாட்டு கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு கிடைக்கும் பணம் மாநிலத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

அதேபோல், முன் அனுமதி பெற்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் மாநில விளையாட்டு கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். 

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த உத்தரவிற்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், விளையாட்டு வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என அரசுக்கு தெரியுமா?

அரசு எப்படி எங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானத்தை கேட்கிறது. இதனை நான் ஏன் ஆதரிக்க வேண்டும். இது குறித்து எங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுஷில் குமார் கூறுகையில், அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது போன்ற முடிவெடுக்கும் முன்னர் விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இது வீரர்களின் மதிப்பை கெடுப்பதுடன், அவர்களின் திறமையை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story