யோ யோ டெஸ்டில் தோல்வி: அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல்?


யோ யோ டெஸ்டில் தோல்வி: அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல்?
x
தினத்தந்தி 16 Jun 2018 2:55 AM GMT (Updated: 16 Jun 2018 2:55 AM GMT)

யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால், அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இரண்டு கோடுகள் போடப்பட்டு அதன் நடுவில் 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரவுண்டுகள் வேகமாக ஓடி முடிக்க வேண்டும். இது தான் ‘யோ–யோ’ சோதனை ஆகும். 

இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டோனி, ரெய்னா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க அவர்கள் தகுதிப்பெற்றனர். 

இந்த சோதனையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற அம்பதி ராயுடு, குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனால் அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை அணி நிர்வாகம் இன்னும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  இங்கிலாந்து செல்லும்  இந்திய அணியில்  இடம் பெற்றுள்ள வீரர்களில், யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்த ஒரே ஒரு வீரர் அம்பத்தி ராயுடுதான் எனவும் கூறப்படுகிறது. 


Next Story