கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்த இங்கிலாந்து: சர்வதேச ஒரு நாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை + "||" + England set new men's cricket ODI world record score v Australia

ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்த இங்கிலாந்து: சர்வதேச ஒரு நாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை

ஆஸ்திரேலியாவை துவைத்து எடுத்த இங்கிலாந்து: சர்வதேச ஒரு நாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்தது. #EngVsAus
டிரென்ட்பிரிட்ஜ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இங்கிலாந்து அணியினரின் அதிரடியை சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிய ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை எடுக்க பெரிதும் சிரமப்பட்டது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 159 ஆக இருக்கும் போது ஜாசன் ராய் (82 ரன்கள்) ரன் அவுட்டாகி வெளியேறினார். இந்த ஜோடியை பிரித்து பெருமூச்சு விட்ட ஆஸ்திரேலியா அணிக்கு, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அலெக்ஸ் ஹெல்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி பெரும் அதிர்ச்சி கொடுத்தது.

இருவரும் இணைந்து பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விளாச மைதானத்திலிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பரவசம் அடைந்தனர். எதிர்கொண்ட பந்தை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டிய இந்த ஜோடியை சமாளிக்க முடியாமல் வாயடைத்து போய் நின்ற ஆஸ்திரேலிய அணியினர், ஒரு கட்டத்தில் புலம்ப ஆரம்பித்தனர். இதனிடையே அற்புதமாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் விளாச, அலெக்ஸ் ஹெல்ஸூம் தன் பங்குக்கு சதத்தை பூர்த்தி செய்தார். 34 ஓவர்களில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோ (139 ரன்கள், 5 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்) கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் (11 ரன்கள்) வந்த வேகத்தில் திரும்ப, கேப்டன் மோர்கெல், ஹெல்ஸூடன் இணைந்தார். இந்த ஜோடியும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆட்டம் காட்ட இங்கிலாந்து அணியின் ரன்வேகம் ’மள மள’ வென உயர்ந்தது. 

இதனிடையே 45 வது ஓவரின் 3வது பந்தில் ஹெல்ஸ் அடித்த சிக்ஸரால் அரங்கமெங்கும் அதிர சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 446 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனையை படைத்தது. பின்னர் 47 வது ஓவரில் ஹெல்ஸ் 147 ரன்கள் ( 92 பந்துகள்,  5 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள்) எடுத்து வெளியேறினார். அதே ஓவரில் மோர்கனும் (67 ரன்கள், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) வெளியேற இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 444 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் உலக சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் தனது சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை பதிவு செய்தது.