இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி
x
தினத்தந்தி 20 Jun 2018 9:30 PM GMT (Updated: 20 Jun 2018 8:39 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

நாட்டிங்காம், 

இங்கிலாந்துக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து 481 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோ (139 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (147 ரன்), ஜாசன் ராய் (82 ரன்), கேப்டன் மோர்கன் (67 ரன்) ஆகியோரின் சூறாவளியான பேட்டிங்கின் உதவியுடன் 6 விக்கெட்டுக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இதே மைதானத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. தங்களது முந்தைய சாதனையை இப்போது மாற்றிஅமைத்து இருக்கிறது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளும், மொயீன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவின் படுதோல்வி

ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மோசமான தோல்வி (242 ரன் வித்தியாசம்) இதுவாகும். இதற்கு முன்பு 1986–ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியதே, மோசமான தோல்வியாக இருந்தது. அதே சமயம் இங்கிலாந்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகி இருக்கிறது. 2015–ம் ஆண்டு எட்ஜ்பஸ்டனில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை 210 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே இங்கிலாந்தின் முந்தைய சிறந்த வெற்றியாகும்.

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4 ஒரு நாள் தொடர்களை இழந்துள்ளது. தொடர்ந்து 4 தொடர்களை அந்த அணி இழப்பது 1984–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

பயிற்சியாளர் கருத்து

ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘இப்படியொரு அதிரடியை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. 2006–ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட நாங்கள் 434 ரன்கள் குவித்ததைத் தான் தென்ஆப்பிரிக்க அணியினர் எட்டிப்பிடித்தனர். ஆனால் இது முரட்டுத்தனமான அடி. இதில் இருந்து எங்களது இளம் வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் புலம்பியுள்ளார்.

இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி செஸ்டர்–லீ–ஸ்டிரிட்டில் இன்று நடக்கிறது.


Next Story