கிறிஸ் கெய்லின் வார்த்தைச் சரவெடி!


கிறிஸ் கெய்லின் வார்த்தைச் சரவெடி!
x
தினத்தந்தி 23 Jun 2018 8:15 AM GMT (Updated: 23 Jun 2018 8:15 AM GMT)

‘பேட்டிங்’ என்றாலும் சரி, பேட்டி என்றாலும் சரி, கிறிஸ் கெய்லின் பாணி அதிரடிதான்.

கிரிக்கெட் களம் போல இங்கேயும் வார்த்தைகளில் வெளுத்து வாங்குகிறார்... கிறிஸ் கெய்ல்.

கடந்துபோன ஐ.பி.எல். சீசன் பற்றி உங்கள் கருத்து?

மீண்டும் ஒருமுறை நான் ஐ.பி.எல்.லின் அங்கமாக இருந்தது அற்புதம். உலகிலேயே சிறந்த கிரிக்கெட் தொடர் இது. இந்த சீசனில் நான் புது அணியில் ஆடினேன், அங்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு அருமை. எங்களின் தொடக்கம் சிறப்பாக இருந்தது, ஆனால் பிற்பாடு வேகத்தை இழந்து விட்டோம். அடுத்த ஆண்டு சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.

என்னைத் தேர்வு செய்ததன் மூலம் சேவாக் ஐ.பி.எல்.லை காப்பாற்றிவிட்டார் என்று சொன்னீர்களே? நகைச்சுவைக்காக அப்படிச் சொன்னீர்களா?

அது ‘ஜோக்’ இல்லை. நான் சீரியசாகத்தான் சொன்னேன். ஐ.பி.எல்.லுக்கு நட்சத்திரங்கள் தேவை. அதற்கு எனது தேர்வு உதவியது. நான் ஐ.பி.எல்.லுக்கு நிறைய செய்திருக்கிறேன். நீங்கள் பழைய புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே புரியும். சர்வதேச டி-20 யிலும் இரண்டு சதங்கள் அடித்திருக்கிறேன், ஒரு கோப்பையை வென்று கொடுத்திருக்கிறேன். இன்றும் சுறுசுறுப்பாக இருக்கிறேன், நன்றாக ஆடுகிறேன். இப்போதும் கிரிக்கெட்டுக்கு என்னால் என்ன கொடுக்க முடியும் என்பதை நீங்கள் பார்க்கலாம். நான் இந்தியாவில் கிரிக்கெட் ஆட விரும்புகிறேன். இங்கே இந்த விளையாட்டு தீவிரமாய் ரசிக்கப்படுகிறது. என்னிடமும் இன்னும் எரிபொருள் தீர்ந்துவிடவில்லை.

ஆரம்பத்தில் உங்களை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராதபோது நீங்கள் கவலைப்பட்டீர்களா?


இல்லை... இல்லை... இல்லை. நான் அதுகுறித்து ஆச்சரியப்படவில்லை. நான் ஆரம்பத்திலேயே ஏலத்தில் எடுக்கப்பட்டேனா, கடைசி நேரத்தில் ஏலத்தில் எடுக்கப்பட்டேனா என்பது விஷயமே இல்லை. எனக்கு வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை. நாம் நம்மை ஏமாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஐ.பி.எல்.லில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். உண்மையில், ஏலத்தில் என்ன நடக்கிறது என்று நான் கவனிக்கவே இல்லை. அந்த நேரம், எங்கள் கரீபியனில் அதிகாலை நேரம் என்பதால் நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.

ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்னால் நீங்கள் வங்காளதேசத்தில் 18 சிக்சர்களுடன் அதிரடியாக 146 ரன்கள் குவித்திருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஏலத்தில் எடுக்க ஏன் யோசித்தார்கள்?

எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எனது வயது குறித்து யோசித்திருக்கலாம். வாட்சனுக்கு என்ன வயது? அவர் இரண்டு செஞ்சுரிகள் அடித்திருக்கிறாரே? எனக்கு வயது 39. ஆனால் நான் இப்போதும் சதங்கள் அடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நீங்கள் உங்களை ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்கிறீர்கள். அதற்கு அர்த்தமென்ன?

என்னை பொதுவாக ‘வேல்டு பாஸ்’ என்பார்கள். அது மாதிரிதான்.

உங்களை யார் அப்படி அழைத்தது?

உலகமேதாம்பா! உலக பாஸ், உலக கிரிக்கெட்டில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் பாஸ்! கிரிக்கெட்டிலும், கிரிக்கெட்டுக்கு வெளியிலும் நிறையச் செய்யக்கூடிய நபர். நீங்கள் உங்கள் உரிமைக்காக எழுந்து நின்று குரல் கொடுக்கணும், போராடணும். பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் அதைச் செய்வதில்லை. வாழ்க்கையில் நம்பிக்கை வைப்பதற்கும், கிரிக்கெட் விளையாடும்போதே வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் நான் கிரிக்கெட் வீரர்களுக்கு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறேன். நான் இந்த உலகத்தில் அந்தப் பணியைச் செய்துவிட்டேன். அடுத்ததாக, பிரபஞ்சத்தைக் குறிவைத்திருக்கிறேன். விண்வெளியில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தற்போது நான் போராட வேண்டும். செவ்வாய், வியாழனில் நான் பந்து வீச்சாளர்களுடன் மோத வேண்டும். அதனால்தான் நான், ‘யுனிவர்ஸ் பாஸ்’.

உண்மையில் நீங்கள், ஐ.பி.எல்.லில் சிறந்த பந்துவீச்சாளரான ரஷித்கான் மீது ஒரு பாஸ் போல ஆதிக்கம் செலுத்தினீர்கள். அது எப்படி முடிந்தது? ரகசியம் ஏதும் இருக்கிறதா?

அதில் ரகசியம் ஏதுமில்லை. உலகத்திலேயே சிறந்த வீரருக்கு அவர் பந்து வீசினார். நான் அவருக்கு எதிராக சிலமுறை ஆடியிருக்கிறேன். தற் போதைக்கு சிறந்த 20 ஓவர் போட்டி பந்துவீச்சாளர் அவர். அந்த மதிப்பை நான் அவருக்குக் கொடுக்க வேண்டும். கிரிக்கெட்டில் அவர் கொண்டிருக்கும் பற்றும் அபாரம். கிரிக்கெட்டில் மேலும் பல சுழற்பந்துவீச்சாளர்கள் தோன்றவும், 20 ஓவர் போட்டியில் ஆடவும் அவர் தூண்டுதலாக இருப்பார். வருங்காலத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் 20 ஓவர் போட்டியில் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள்.

பல பந்துவீச்சாளர்கள் உங்களுக்குப் பந்துவீசப் பயப்படுவார்கள். நீங்கள் எந்தப் பந்துவீச்சாளரை எதிர்கொள்ளப் பயப்படுவீர்கள்?

பந்துவீச்சாளர்கள்தான் பயப்படணும். கிறிஸ் கெய்லுக்கு பயமில்லை!

பீல்டிங் செய்வதும், விக்கெட்டுகள் இடையே ஓடுவதும் உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறதே?


இல்லை, இல்லை. யாரைப் பற்றிச் சொல்றீங்க? விக்கெட்டுகளிடையே மிக வேகமாக ஓடக்கூடியவன் நான்.

ஆனால் நீங்கள் இரண்டாவது, மூன்றாவது ரன் எடுப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லையே?

காரணம், அங்கே இரண்டாவது, மூன்றாவது ரன்னுக்கு வாய்ப்பிருக்காது. வாய்ப்பிருந்தால் நான் நான்கு ரன்கள் கூட ஓடுவேன்.

உங்களைச் சுற்றிச் சுற்றும் சர்ச்சைகள் குறித்து?

(சிரிப்புடன்) நான் நல்ல மனிதன், ரொம்ப அற்புதமானவன்-நீங்கள் என்னைப் பற்றி மோசமாக, சர்ச்சையாக ஏதாவது எழுதாத வரை. வாழ்க்கை அருமையாயிருக்கிறது, எனக்கு குறையொன்றும் இல்லை. உண்மையில், கடந்த சில வருடங்களாகவே என்னைப் பற்றி எந்தச் சர்ச்சையும் இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தற்போதைய நிலை பற்றி?

பல இளம் வீரர்கள் உருவாகி வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு புதிய அணியை கட்டியெழுப்பும் முயற்சியில் இருக்கிறோம். அதற்குக் கொஞ்சம் நேரமாகும். ஒரே இரவில் எல்லாம் நடந்துவிடாது. அனுபவமிக்க பல வீரர்களை நாங்கள் இழந்துவிட்டோம். ஆனால் வாழ்க்கை தொடர்ந்து நகர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். எந்த ஒரு வீரராலும் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. யாராக இருந்தாலும் ஒருகட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றே ஆகணும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நல்ல நிலையை அடைய நான் தொடர்ந்து வாழ்த்துவேன்.

நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றதும் எப்படி வாழத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

நான் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறவன்.

உங்கள் வீட்டில், ‘போல் டான்ஸ்’ ஆடுவதற்கான வசதியெல்லாம் இருக்கிறதாமே?

நீங்களே என் வீட்டுக்கு வந்து பாருங்கள். நீங்கள் ஜமைக்கா வரும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நான் செய்கிறேன். அப்புறம்... ஆமாம், எங்கள் வீட்டு அண்டர்கிரவுண்ட் பகுதியில் ‘போல் டான்ஸ்’ வசதி இருக்கிறது.

நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று இயான் சேப்பல் கூறியிருக்கிறாரே?

யாருப்பா இயான் சேப்பல்! 

Next Story