கிரிக்கெட்

‘இங்கிலாந்து சவாலுக்குத் தயார்!' -ராகுல் + "||" + England challenge -Ragul

‘இங்கிலாந்து சவாலுக்குத் தயார்!' -ராகுல்

‘இங்கிலாந்து சவாலுக்குத் தயார்!' -ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியின் இந்த இங்கிலாந்து பயணத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவர், லோகேஷ் ராகுல்.
ஐ.பி.எல். போட்டிகளில் ராகுலின் சிறப்பான செயல்பாடுதான் அவர் மீது எதிர்பார்ப்பு விழுந்திருப்பதற்குக் காரணம்.

ஐ.பி.எல், இங்கிலாந்து தொடர் பற்றி என்ன நினைக்கிறார் ராகுல்?

அவரது பேட்டியில் அறிவோம்...

உங்களுக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல். சிறப்பானதாக அமைந்தது... உங்களின் நடப்பு ஆட்டத்திறன் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்?

எங்கள் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை இது ஏமாற்றமான தொடர். நாங்கள் ‘பிளே-ஆப்’ சுற்றில் நெருக்கமாகத் தோற்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில், பேட்டிங்கில் எனக்கு மிகச் சிறப்பான தொடர் இது. நான் நன்றாக, எனது இயற்கையான ஆட்டத்தை ஆடினேன். நாங்கள் இயல்பாக ஆடுவதற்கு சேவாக் தொடர்ந்து ஊக்குவித்தார். முதல் போட்டியிலிருந்து நாங்கள் அதைத்தான் செய்தோம். பஞ்சாப் அணியின் உரிமையாளர்களும் என் மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக எனது பேட்டிங் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.

நீங்கள் நன்றாக விளையாடியதுடன், சில வித்தியாசமான ஷாட்களையும் அடித்தீர்கள். 20 ஓவர் போட்டியில் ராகுல் ஓர் ஆபத்தான வீரர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள், இல்லையா?

கடந்த 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 51 பந்துகளில் 110 ரன்கள் குவித்ததுதான் என்னால் டி-20யில் அதிரடியாக ஆட முடியும் என்ற நம்பிக்கையை எனக்கே ஏற்படுத்தியது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு எனது தன்னம்பிக்கை கூடியது, என்னைப் பற்றிய பொதுக்கருத்தும் மாறியது. வித்தியாசமான ஷாட்கள் விளையாடக் கற்பதற்கு நான் வலைப் பயிற்சியில் அதிகம் முயற்சி செய்கிறேன். இதுபோன்ற ஷாட்கள் பந்துவீச்சாளர்கள் எதிர்பாராததாக இருக்கும், இதன் மூலம் பவுண்டரி அடிக்கும் வாய்ப்பும் கூடும். காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆடமுடியாததில் நான் ஏமாற்றம் அடைந்திருந்தேன். எனவே இந்த ஆண்டு தொடரில் என்னை நிரூபிப்பதற்குத் தீர்மானித்திருந்தேன்.

கிறிஸ் கெய்லுடன் இணைந்து பேட்டிங் செய்தது எப்படி இருந்தது? அவரிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

கிறிஸ் கெய்ல் ஓர் அற்புதமான வீரர், இதுவரையிலான 20 ஓவர் போட்டி வீரர்களிலேயே சிறந்தவர். பெங்களூரு அணியிலும், தற்போது பஞ்சாப் அணியிலும் கெய்லுடன் இணைந்து ஆடியவகையில் நான் அதிர்ஷ்டசாலி. நாங்கள் அவரைத் தேர்வு செய்தபோது பலரும் புருவம் உயர்த்தினார்கள், ஆனால் தன் மீதான பிறரின் சந்தேகங்களை அவர் தகர்த்துவிட்டார். இந்த ‘யுனிவர்ஸ் பாசிடம்’ இருந்து கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக அவர் விளாசும் சிக்சர்களில். கெய்லுடன் இணைந்து பேட்டிங் செய்ததும், அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்ததும் மறக்க முடியாதவை. களத்துக்கு வெளியே பார்ட்டி, கொண்டாட்டம் என்று தூள் கிளப்புபவர் அவர்.

ஏபி டி வில்லியர்ஸ் உங்களுக்கு அளித்த அறிவுரை குறித்து டுவீட்டரில் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை நீங்கள் எந்த அளவு ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் ஆட்டத்தை மேம்படுத்த அது எந்தவகையில் உதவி செய்திருக்கிறது?

கிரிக்கெட்டை மிக எளிமையாக விளையாடியவர் வில்லியர்ஸ். அதுதான் அவரது வெற்றி ரகசியமாக விளங்கியது. இரண்டு சீசன்களுக்கு முன்னால் நான் பெங்களூரு அணியில் விளையாடியபோது சில போட்டிகளில் 50, 60 ரன்கள் அடித்தபோதும் என்னால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அப்போது நான் சதங்கள் அடித்து அணியைக் கரைசேர்க்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்நிலையில் வில்லியர்ஸ் எனக்கு ஆதரவாக, ‘கிரிக்கெட் ஓர் எளிமையான விளையாட்டு, அதை நாம் சிக்கலாக்கிக் கொள்ளக்கொள்ள கடினமாகும்’ என்றார். அந்த ஜாம்பவான் கூறிய இந்த அறிவுரை எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது, இம்முறை எங்கள் அணியை வெற்றிபெற வைக்கும் வகையில் பலமுறை விளையாட முடிந்தது.

இந்த இங்கிலாந்து தொடருக்கு எந்த மாதிரியான தன்னம்பிக்கையை ஐ.பி.எல். உங்களுக்கு அளித்திருக்கிறது?

ஐ.பி.எல்.லில் நிறைய ரன்கள் குவித்தது சிறப்பான விஷயம்தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டது. இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளவும் சில நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவில் நாங்கள் விளையாடியவிதம் எங்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது.

இங்கிலாந்தில் நீங்கள் முதல்முறையாக டெஸ்ட் தொடரில் விளையாடப் போகிறீர்கள். இந்தத் தொடரை நீங்கள் எப்படி எதிர்நோக்கியிருக்கிறீர்கள்?

இங்கிலாந்து தொடர் குறித்து நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு புதிய சவால், லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். இங்கிலாந்தில் நன்றாக விளையாடுவது ஒரு சிறந்த வீரருக்கான முத்திரையாகும். எனவே அங்கு விளையாடுவதை நான் உற்சாகத்தோடு எதிர்நோக்கியிருக்கிறேன்.

இங்கிலாந்து சூழ்நிலையை எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

இங்கிலாந்து சூழ்நிலையைக் கையாளுவது கடினமாக இருக்கும். ஆனால் எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்ற சில சிறந்த பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து கொண்டிருக்கிறது. எனவே எங்களுக்கு நிச்சயமாக எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாங்கள் உலகின் ‘நம்பர் 1’ டெஸ்ட் அணி, எங்கள் ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

கடைசியாக 2016-ம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 199 ரன்கள் குவித்தீர்கள். அதன்பிறகு நீங்கள் பலமுறை நன்றாக ஆடியிருந்தாலும் சதம் அடிக்கவில்லை. அதுபற்றி யோசிக்கிறீர்களா, சதம் அடிக்க ஆவலாக இருக்கிறீர்களா?

கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் கடந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. நாங்கள் சில கடினமான பிட்ச்களில் ஆடினோம். சிலமுறை ஐம்பதை தாண்டியும் அதை பெரிய சதங்களாக மாற்றவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் நாம் நமது திறமையை நம்பினால், ரன்கள் தானாக வரும். எனவே நான் சதங்கள் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு கடினமானதாக அமைந்தது. அதிலிருந்து, இங்கிலாந்தில் உதவும் வகையில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்?

அது எங்களுக்கு கடினமான தொடர்தான். தென்ஆப்பிரிக்க அணியில் நான்கு உலகத்தர பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அங்கு டெஸ்ட் தொடரை நாங்கள் தொய்வாக ஆரம்பித்தாலும், வெற்றியுடன் முடித்தோம். அது, ஒருநாள் தொடருக்கு தன்னம்பிக்கை தந்தது. அந்தத் தன்னம்பிக்கையை நாங்கள் இங்கிலாந்துக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். நமது வீரர்கள் இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட உற்சாகத் துடிப்புடன் உள்ளனர்.

ராகுலின் குரலில் தென்படும் தெம்பும் துடிப்பும் இங்கிலாந்தில் எப்படி வெளிப்படுகிறது என்று பார்ப்போம்.