இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 5 July 2018 10:00 PM GMT (Updated: 5 July 2018 8:43 PM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

கார்டிப்,

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

2-வது 20 ஓவர் கிரிக்கெட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது.

இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டி கார்டிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

லோகேஷ் ராகுல், குல்தீப் அசத்தல்

முந்தைய 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார். பந்து வீச்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (69 ரன்கள்) மட்டுமே அரை சதத்தை கடந்தார். மற்ற வீரர்கள் சொந்த மண்ணிலேயே சோபிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி தொடரை வெல்லுமா?

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ள இந்திய அணி கடந்த ஆட்டத்தை போல் இந்த முறையும் அதிரடியை காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இங்கிலாந்து அணியினர் சுழற்பந்து வீச்சு எந்திரத்தின் உதவியுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு தயாராகி இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் இந்திய அணியினர் வெற்றிக்காக முழு முயற்சியில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணியும் எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேரடி ஒளிபரப்பு

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்–3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

அணி வீரர்கள்

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், இயான் மோர்கன் (கேப்டன்), பேர்ஸ்டோ, ஜோரூட், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட். அடில் ரஷித்.


Next Story